“அப்புறம் எதுக்குயா நீங்க ஆட்சியில இருக்கீங்க?”…. முதலமைச்சர் விஜய்யை மேடையிலேயே வச்சு செஞ்ச அதிமுக விந்தியா….!

By Nanthini on ஐப்பசி 1, 2026

Spread the love

தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் களம் தற்பொழுது சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் பானுமதியை ஆதரித்துத் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளரும் நடிகையுமான விந்தியா, தமிழக வெற்றிக் கழகத்தையும் முதலமைச்சர் விஜயையும் மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார். மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், “முன்பு கோழி முட்டை போட்டாலும், கோவிந்தா எனச் சொல்லி மொட்டை போட்டாலும் எல்லாமே திராவிடக் கட்சிகளின் சதிதான் என்று விஜய் பேசினார். ஆனால், இப்போது அவரே ஆட்சியில் முதலமைச்சராக இருந்துகொண்டு மின் தடைக்குக்கூட திராவிடக் கட்சிகளின் சதி எனக் காரணம் கூறுகிறார்; அப்படி என்றால் அவர் எந்த ஆதாரத்தில் ஆட்சியில் இருக்கிறார்?” எனக் கேள்வி எழுப்பினார்.

முன்னதாகச் செய்தியாளர்களைச் சந்தித்த விந்தியா, விஜய் பொதுமேடைகளில் எப்போதும் யாரோ எழுதிக் கொடுப்பதைப் பார்த்து மட்டுமே பேசி வருகிறார் என்று சாடினார். கடந்த பொதுத்தேர்தலில் அதிமுகவை ஒரு சில்லறை கட்சி போல விமர்சித்துவிட்டு, தற்போது தாராபுரம் தொகுதியைக் கைப்பற்றுவதற்காகத் தவெக அமைச்சர்கள் பலர் இங்கு வந்து முகாமிட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார். எத்தனை அமைச்சர்கள் வந்து கூவினாலும், தாராபுரம் தொகுதி என்பது எப்போதுமே அசைக்க முடியாத அசல் அதிமுகவின் கோட்டை என்றும், இத்தொகுதி மக்கள் மீண்டும் அதிமுக பக்கமே உறுதியாக நிற்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

   

மேலும், அதிமுகவிலிருந்து விலகித் தவெகவில் இணைந்த மகேந்திரனுக்கு, கட்சிக்கு வந்த ஒரே மணி நேரத்திற்குள் மாவட்டச் செயலாளர் பொறுப்பை முதலமைச்சர் விஜய் அவசர அவசரமாக வழங்கியதை அவர் சுட்டிக்காட்டினார். அதிமுகவிலிருந்து விலகிச் சென்ற அனைவரும் சுயநலத்திற்காகவே அங்கு சென்றுள்ளனர் என்றும், தாய் இயக்கத்தில் பெரிய பதவிகளில் இருந்து சொகுசாக வாழ்ந்துவிட்டு, பதவி கிடைக்காத விரக்தியிலேயே கட்சி தாவியுள்ளனர் என்றும் விந்தியா கடுமையாகச் சாடினார்.

   

தற்போது தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல் களங்களில் தவெகவுக்கு அடிமட்ட அளவில் வேலை செய்யவும், பூத் முகவர்களாகச் செயல்படவும் ஆட்களே இல்லை என்று விந்தியா சாடினார். இதனாலேயே தேர்தல் அனுபவம் வாய்ந்த பழைய அதிமுகவினரைப் பணமும் பதவியும் கொடுத்துத் தவெக தலைமை வம்படியாக விலை பேசி வாங்கி வருவதாகக் குற்றம்சாட்டினார். தாய் இயக்கத்திற்குத் துரோகம் செய்துவிட்டுப் பதவிக்காக விலைபோன இத்தகைய நபர்களுக்கு, வரும் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள தாராபுரம் இடைத்தேர்தலில் வாக்காளர்கள் தகுந்த பாட புகட்டுவது உறுதி என்றும் அவர் தெரிவித்தார்.