அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள ‘சிக்ஸ் பிளாக்ஸ் மேஜிக் மவுண்டன்’ பொழுதுபோக்கு பூங்காவில், கடந்த 2002 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 24 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த உலகின் புகழ்பெற்ற ‘எக்ஸ்2’ எனும் 4D ராட்சச ராட்டினம் நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது.
மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் 360 டிகிரி கோணத்தில் சுழலக்கூடிய இந்த ஆபத்தான ராட்டினத்தில் பயணித்ததால் குறைந்தது 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 100 க்கும் மேற்பட்டோர் கடுமையான மூளைக் காயங்களுக்கு ஆளாகியுள்ளனர். சமீபத்தில் இதில் பயணித்த நவோமி கிரீர்-வில்க்கின்சன் என்ற 25 வயது இளம்பெண், ராட்டினத்தின் அதிவேகச் சுழற்சியால் மூளையில் பலத்த காயமடைந்து கோமா நிலைக்குச் சென்று செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் உயிருக்குப் போராடி வருகிறார்.
முன்னதாக 2022 ஆம் ஆண்டு கிறிஸ்டோபர் ஹாவ்லி என்ற 22 வயது இளைஞர் இந்த ராட்டினத்தில் பயணித்து முடித்தவுடன் மயங்கி விழுந்து அடுத்த நாளே பரிதாபமாக உயிரிழந்தார். தொடர்ந்து பயணிகள் பலர் மூளைக் காயம் மற்றும் உயிரிழப்புகளுக்கு ஆளானதால் எழுந்த பல வழக்குகள் மற்றும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, இந்த ராட்சச ராட்டினத்தை நிர்வாகம் நிரந்தரமாக மூடுவதாக அறிவித்துள்ளது.
