திருமணமாகி எட்டு மாதங்களே ஆன நிலையில், இரண்டரை மாத கர்ப்பிணியாக இருந்த 24 வயதான பிரியங்கா, கடந்த செப்டம்பர் 19 அன்று தனது கணவர் ராஜசேகர் முன்னிலையில் ஹேமாவதி கால்வாயில் குதித்து மாயமானார். அவரைத் தேடும் பணியில் தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் 11 நாட்களாகத் தீவிரமாக ஈடுபட்ட நிலையில், முடிவில் துமகூரு மாவட்டத்தில் உள்ள கோலாலா ஏரியில் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.
பிரியங்காவின் மரணம் குறித்து இருவீட்டாரும் முரண்பட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி கணவர் ராஜசேகர் தான் வரதட்சணை கொடுமையால் தங்களது மகளைக் கொன்றுவிட்டதாகப் பெண்ணின் பெற்றோர் புகார் கூறுகின்றனர். இதற்கு மறுப்புத் தெரிவிக்கும் கணவர் தரப்பினர், பிரியங்காவின் முதல் திருமணத்தை மறைத்து அவரை மிரட்டியே இந்தப் பெண்ணின் பெற்றோர் திருமணம் செய்து வைத்ததாகவும், நீச்சல் தெரிந்த அவர் எப்படி மூழ்கினார் என்றும் சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். உண்மையான காரணத்தைக் கண்டறியத் தடயவியல் சோதனைகள் மற்றும் சிசிடிவி பதிவுகள் மூலம் காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
