சமூக ஊடகங்களில் தங்களின் அன்றாட வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்வது இன்று பலருக்கும் வாடிக்கையாகிவிட்டது. ஆனால், அதீத விளம்பர ஆசையால் வீட்டின் அமைப்பு, கழிப்பறை, படுக்கையறை வரை காட்டி ‘ஹோம் டூர்’ (Home Tour) வீடியோக்கள் வெளியிடுவதும், தங்களின் நகை மற்றும் பணத்தைப் பந்தாவாகக் காட்சிப்படுத்துவதும் பெரும் ஆபத்தில் போய் முடிகிறது என்பதை உணர்த்தும் விதமாக நாகர்கோவிலில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தம்மத்துக்கோணம் பகுதியில் வசித்து வரும் யூடியூபர் தம்பதியான மதுமிதா – வினோத்குமார் என்பவரது வீட்டில், இரு தினங்களுக்கு முன்பாக மர்ம நபர்கள் வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பீரோவை உடைத்து அங்கிருந்த சுமார் 118 பவுனுக்கும் அதிகமான தங்கம் மற்றும் வைர நகைகள், ₹50,000 ரொக்கம் என மொத்தம் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
https://www.instagram.com/reel/Ddvlk38zTkV/?utm_source=ig_embed&ig_rid=AmnYR_LO3dddGrF_dVf2K0t
புகாரின் பேரில் தனிப்படை அமைத்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர், கைரேகை நிபுணர்கள், மோப்ப நாய் மற்றும் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வந்தனர். இதில், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த இசக்கிபாண்டி (30) மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர்களான முருகன், முருகேசன் ஆகிய மூன்று பேரையும் காவல்துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்த நகைகளையும் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இன்ஸ்டாகிராமில் மதுமிதா வெளியிட்ட பந்தா வீடியோக்களே இக்கொள்ளைக்கு முக்கியக் காரணம் என்பது தெரியவந்துள்ளது. மதுமிதாவின் வீடியோக்களில் அதிகளவு நகைகளும் பணமும் காட்டப்பட்டதால், அங்குச் சென்றால் பெருந்தொகையைக் கொள்ளையடிக்கலாம் எனத் திட்டமிட்டு இச்சம்பவத்தை அரங்கேற்றியதாகக் கொள்ளையர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். சமூக ஊடகங்களில் எல்லை மீறிய சுயவிளம்பரம் மற்றும் பாதுகாப்பு பற்றிய கவனக்குறைவு எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கும் என்பதற்கு இச்சம்பவம் ஒரு கசப்பான பாடமாக அமைந்துள்ளது.
