விஜய் வேகத்திற்கு நடுவே அண்ணாமலையின் ரகசிய மூவ்… திமுக, அதிமுக முன்னாள் பிரபலங்களுக்கு வைத்த ‘செக்’…. தென் மாவட்டங்களில் அதிரடி ஆபரேஷன்….!

By Nanthini on புரட்டாதி 29, 2026

Spread the love

விஜய் கட்சி தொடங்கி மிகக் குறைந்த காலத்தில் அடைந்த வெற்றியும், அதைத் தொடர்ந்து பல திரையுலகப் பிரபலங்கள் அரசியல் ஆசையில் ரசிகர் மன்றப் பணிகளை முடுக்கிவிட்டிருப்பதும் தமிழக அரசியலில் புதிய அலைகளை உருவாக்கியுள்ளது. அதேவேளையில், தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை ‘வி தி லீடர்ஸ்’ என்ற அமைப்பைத் தொடங்கி, சுற்றுச்சூழல் சார்ந்த பணிகளிலும் வைகை நதியைத் தூய்மைப்படுத்தும் திட்டங்களிலும் அமைதியாகக் கவனம் செலுத்தி வருகிறார். வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தனது வாக்கு வங்கியைச் சோதித்துப் பார்க்கத் திட்டமிட்டுள்ள அவர், அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்த தொண்டர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் முடிவு செய்துள்ளார்.

அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கு 50 லட்சம் உறுப்பினர்கள் தேவை என்று இலக்கு நிர்ணயித்த அண்ணாமலையால், ஆரம்பகட்ட வேகத்திற்குப் பிறகு தற்போது வரை சுமார் 21 லட்சம் உறுப்பினர்களை மட்டுமே சேர்க்க முடிந்துள்ளது. தங்களது அமைப்பில் முகம் தெரிந்த நிர்வாகிகள் குறைவாக இருப்பதால், அதிமுக மற்றும் திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்களிடம் அவரது ஆதரவாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். குறிப்பாகத் தென் மாவட்டங்களில் அண்ணாமலை ஆதரவாளர்கள் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

   

கட்சியில் புதிய நிர்வாகிகளை இணைக்கும் விஷயத்தில், ஊழல் குற்றச்சாட்டுகளோ அல்லது முறைகேடு புகார்களோ இல்லாத தூய்மையான நபர்களை மட்டுமே சேர்க்க வேண்டும் என அண்ணாமலை நிபந்தனை விதித்துள்ளார். ஆனால், அத்தகைய நபர்களைக் கண்டறிவது கடினமாக இருப்பதால் நிர்வாகிகள் செயல்பாடுகளில் சுணக்கம் காட்டி வருகின்றனர். இதனால் அண்ணாமலையே நேரடியாகக் களமிறங்கி சில முக்கியப் புள்ளிகளிடம் பேசி வந்தபோதிலும், எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் கூட்டம் கூடாததால் ‘வி தி லீடர்ஸ்’ அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

   

இன்னொரு புறம், அண்ணாமலையுடன் சென்ற பா.ஜ.க தொண்டர்களை மீண்டும் தாய்க்கட்சிக்கு அழைத்து வரும் முயற்சியில் நயினார் நாகேந்திரன் தீவிரமாக இறங்கியுள்ளார். அவரது இந்த முயற்சிக்கு உடனடியாகப் பலன் கிடைத்து, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அண்ணாமலை ஆதரவாளர்கள் மீண்டும் பாஜகவிற்கே திரும்பி வருகின்றனர். இதனால் உற்சாகமடைந்துள்ள நயினார் நாகேந்திரன், மேலும் பல முக்கிய நிர்வாகிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.