ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பயணிகளை ஏற்றுவது தொடர்பாக ஆட்டோ ஓட்டுநர்களான சதீஷ் மற்றும் இளங்கோ இடையே பிரச்சனை ஏற்பட்டது. இவர்களுக்கு ஆதரவாக கல்யாணசுந்தரம், கருப்புராஜா ஆகிய இருவர் தலையிட்டு ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் காயமடைந்த இருவரும் சிகிச்சை பெறுவதற்காக பரமக்குடி அரசு மருத்துவமனைக்குச் சென்றனர்.
மருத்துவமனை வளாகத்திலும் அவர்கள் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு வெடித்தது. அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த பார்த்திபனூர் காவல் நிலைய பெண் காவலரான கண்ணகி இந்த மோதலைத் தடுத்து நிறுத்த முயன்றார். அந்த பரபரப்பான சூழ்நிலையில் கருப்புராஜா அவரை வலுவாகக் கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் பலத்த காயமடைந்த கண்ணகி, அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இரண்டு குழந்தைகளுக்குத் தாயான பெண் காவலர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து வந்த ராமநாதபுரம் டி.ஐ.ஜி, காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், கல்யாணசுந்தரத்தைக் கைது செய்துள்ளதோடு, தலைமறைவான கருப்புராஜாவை மருத்துவமனை சிசிடிவி கேமரா பதிவுகளைக் கொண்டு தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
