“அமெரிக்கா பொய் சொல்லுது”…. உலகைக் கலங்கடிக்கும் கச்சா எண்ணெய் விலை உயர்வு… ஈரானிய சபாநாயகர் அம்பலப்படுத்திய உண்மை….!

By Nanthini on புரட்டாதி 28, 2026

Spread the love

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நீண்டகால போர் பதற்றம் இன்னும் குறைந்தபாடில்லை. இரு நாடுகளுக்கும் இடையே தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற போதிலும், தத்தமது கடுமையான நிபந்தனைகளில் இரு தரப்பும் உறுதியாக இருப்பதால் எந்தவொரு தெளிவான உடன்பாடும் எட்டப்படவில்லை. இந்நிலையில், ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றுள்ள ஈரானிய பிரதிநிதிகள், தங்கள் நாட்டின் நிலைப்பாட்டை உலகரங்கில் மிகவும் தெளிவாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்துள்ளனர்.

நியூயார்க்கில் ஊடகங்களுக்குப் பேட்டியளித்த ஈரானிய வெளியுறவு அமைச்சர் அராக்சி, தாம் போரைத் தீவிரப்படுத்துவதற்காக இங்கு வரவில்லை என்றும், அமைதியை நிலைநாட்டுவதற்காகவே அதிபர் பெஷெஷ்கியனுடன் வருகை தந்துள்ளதாகவும் விளக்கமளித்தார். ஈரான் உண்மையான ராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளுக்கு எப்போதும் தயாராக இருப்பதாகக் கூறிய அவர், அதேவேளையில் மீண்டும் ஒரு அழிவுகரமான போர் சூழல் உருவானால் அதை எதிர்கொள்ளவும் தனது நாடு முழுமையாக ஆயத்தமாக உள்ளதாக எச்சரித்தார். மேலும், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவது அமெரிக்க அதிபர் ட்ரம்பின் கையிலேயே உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

   

இந்த அமைதிப் பேச்சுவார்த்தைகளின் மையப் புள்ளியாக உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ‘ஹார்முஸ் ஜலசந்தி’ நிலவுகிறது. இந்த ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கும், பிராந்தியத்தில் சண்டையை நிறுத்துவதற்குமான ஈரானின் முன்மொழிவை அதிபர் ட்ரம்ப் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். ஈரானின் இந்த இணக்கமான முடிவு தங்கள் நாட்டின் அரசியல் அழுத்தத்தால் மட்டுமே எடுக்கப்பட்டது எனக் கூறியுள்ள ட்ரம்ப், ஈரானின் நிபந்தனைகளை ஏற்க மறுத்து வருகிறார். இதனால், சர்வதேச கடல்சார் வர்த்தகத்திலும் எரிபொருள் போக்குவரத்திலும் தொடர் முடக்கம் நீடிக்கிறது.

   

இதனிடையே, அமெரிக்காவின் கூற்றுகளை ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் கடுமையாகச் சாடியுள்ளார். ஹார்முஸ் ஜலசந்தியின் மீது ஈரானுக்குக் கட்டுப்பாடு இல்லை என்று அமெரிக்கா பொய் பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அவ்வாறு கட்டுப்பாடு இல்லையென்றால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 35 டாலரிலிருந்து 50 டாலராக உயர்ந்தது எப்படி என்று கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்காவின் இந்த முரண்பாடான நிலைப்பாடு சந்தையை ஏமாற்றும் முயற்சி அல்லது அப்பட்டமான பொய் எனச் சுட்டிக்காட்டியுள்ள அவர், ஜலசந்தி விவகாரத்தில் ஈரானின் பிடி தளர்வடையவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.