மதுரையில் இன்று நடைபெற்ற பிரமாண்ட விழாவில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதல்வர் விஜய் முறைப்படி தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காகச் சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்த அவருக்கு, பெருங்குடி, மண்டேலா நகர், சிந்தாமணி மற்றும் கருப்பாயூரணி உள்ளிட்ட வழிநெடுகிலும் திரண்டிருந்த பொதுமக்கள் பெருந்திரளாகக் கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர். திறந்தவெளி வாகனத்தில் பேரணியாகச் சென்ற விஜய்யைக் கண்ட தாய்மார்கள் ஆனந்தக் கண்ணீருடன் அவரைக் கட்டித் தழுவினர்; விஜய்யும் குழந்தைகட்குத் தங்க மோதிரங்களை அணிவித்து, அவர்களைத் தூக்கிக் கொஞ்சி மகிழ்ந்தார்.
இந்த பேரணியின் போது பாதுகாப்பிற்காகச் சாலையின் இருபுறமும் இரும்புத் தடுப்புகளும் சவுக்குக் கம்புகளும் அமைக்கப்பட்டிருந்த போதிலும், எதிர்பாராத பாதுகாப்புச் சம்பவங்கள் சில அரங்கேறின. விஜய் பயணித்த கான்வாய் வாகனங்களுக்கு இடையே திடீரென ஸ்கூட்டியில் நுழைந்த நபர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனே உஷாரான காவல்துறையினர் அந்த நபரைத் தடுத்து நிறுத்தி, வாகனத்தைப் பறிமுதல் செய்து தீவிர விசாரணைக்குப் பிறகே அவரை விடுவித்தனர். அதேபோல விஜய்யைக் காண்பதற்காக மின்கம்பத்தில் ஏற முயன்ற ஒருவரை, வாகனத்தில் இருந்தபடியே விஜய் அதட்டி எச்சரித்துக் கீழே இறங்குமாறு கூறினார்.
பாதுகாப்பு ஏற்பாடுகளின் ஒரு பகுதியாக ஆபத்தான மரக்கிளைகள் வெட்டப்பட்டிருந்தபோதிலும், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான மக்கள் நீண்டநேரம் சாலையில் காத்திருந்தனர். இதனால் ஏற்பட்ட கடுமையான வெயில் மற்றும் கூட்ட நெரிசல் காரணமாக 10-க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர். குறிப்பாக காந்தி அருங்காட்சியகத்தின் வெளியே காத்திருந்தவர்களில் 3 பேர் மயக்கமடைந்த சம்பவம் அங்கிருந்தோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மயங்கி விழுந்த அனைவரையும் அங்கிருந்த காவல்துறையினரும் பாதுகாப்பு ஊழியர்களும் உடனடியாக மீட்டு, ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஒருபுறம் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தின் மூலம் நெகிழ்ச்சியான தருணங்கள் அமைந்தாலும், மற்றொருபுறம் பாதுகாப்புச் சோதனைகள் மற்றும் வெயில் காரணமாக ஏற்பட்ட மயக்கச் சம்பவங்கள் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
