“நாங்க ஒன்னா வாழ நீ சாகணும்”… கணவனை நைஸாக பேசி வரவழைத்துக் கொன்ற மனைவி… கார் நம்பரால் சிக்கிய கள்ள ஜோடி…!!

By Gayathri on புரட்டாதி 28, 2026

Spread the love

தென்காசி மாவட்டம் திருமலைக்கோவில் அருகே உள்ள ஒரு தோட்டத்தில் கடந்த வாரம் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று தலையில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டது. இந்த கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த இலத்தூர் காவல்துறையினர், குற்றவாளிகள் யார் என அடையாளம் காண முடியாமல் ஆரம்பத்தில் திணறி வந்தனர். பின்னர் அப்பகுதியில் பதிவான சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்தபோது, சம்பவத்தன்று சந்தேகத்திற்கிடமான வகையில் ஒரு வாடகை கார் அப்பகுதியை கடந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த காரை பின்தொடர்ந்து சென்று அதன் ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள உணவு விடுதி ஒன்றில் மாஸ்டராக வேலை பார்க்கும் மகேஷ்குமார் என்பவர் காரை வாடகைக்கு எடுத்தது தெரியவந்தது.

காவல்துறையினரின் அதிரடி விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவந்தன. ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த ஷட்டர் தொழிலாளியான அப்தவித் ரஹ்மத் என்பவரின் மனைவி நிஷாவிற்கும் (எ) கம்சா, மகேஷ்குமாருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் சேர்ந்து வாழ்வதற்காக, தங்களுக்குத் தடையாக இருந்த கணவர் ரஹ்மத்தை தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளனர். இதற்காக திட்டம் தீட்டிய மகேஷ்குமார், தென்காசியில் அதிக சம்பளத்தில் ஷட்டர் வேலை இருப்பதாக ஆசை வார்த்தை கூறி ரஹ்மத்தை வாடகை காரில் தனியாக அழைத்து வந்துள்ளார்.

   

அங்குள்ள தோட்டத்திற்குள் ஷட்டர் அளவுக்குறிப்புகளை எடுப்பதற்காக ரஹ்மத் சென்றபோது, பின்னால் இருந்து கிரைண்டர் கல்லால் அவரது தலையில் கொடூரமாக தாக்கி மகேஷ்குமார் கொலை செய்துள்ளார். பின்னர் சடலத்தை அங்கேயே வீசிவிட்டு, அதே காரில் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு தப்பிச் சென்றதும் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொலை செய்த இந்த வழக்கில், மகேஷ்குமார் மற்றும் நிஷா ஆகிய இருவரையும் இலத்தூர் காவல்துறையினர் தற்போது கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.