தமிழகத்தில் தவெக அரசு அமைந்த கடந்த ஐந்து மாத காலத்தில், பல்வேறு முக்கியக் கொள்கை முடிவுகள் அறிவிக்கப்பட்டு, பின்னர் வலுவான எதிர்ப்புகள் எழுந்தவுடன் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் சமீபத்தில் சட்டம் ஒழுங்கு தொடர்பான விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கி மனிதவள மேலாண்மைத் துறை அரசாணை வெளியிட்டது. பொதுமக்களிடையேயும் அரசியல் கட்சிகளிடையேயும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியதைத் தொடர்ந்து, அந்த உத்தரவும் உடனே ரத்து செய்யப்பட்டது. கரூர் விவகாரத்தில் எழும் விமர்சனங்களைத் திசைதிருப்பவே இத்தகைய நகர்வுகள் மேற்கொள்ளப்படுவதாக திமுக, அதிமுக, நாதக உள்ளிட்ட எதிர்த்தரப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில், ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை தனது ‘எக்ஸ்’ தளப் பதிவில் தவெக அரசின் இந்தச் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துள்ளார். முதலமைச்சரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரி நியமனம், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநர் மாற்றம், ஆவின் பால் மொத்த விற்பனையாளர்களுக்கான விலை உயர்வு, மாணவர்கள் போராட்டத்தில் பங்கேற்பதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் தற்போதைய RTI விலக்கு அரசாணை எனத் தொடர்ச்சியாக முடிவுகள் அறிவிக்கப்பட்டுப் பின்வாங்கப்படுவதை அவர் பட்டியலிட்டுள்ளார். இத்தகைய போக்கு தவெக அரசின் நிர்வாகத்தில் உள்ள தெளிவின்மையையும் குழப்பத்தையும் வெளிப்படையாகக் காட்டுகிறது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
அரசு எடுக்கும் இத்தகைய முக்கியக் கொள்கை முடிவுகள் அனைத்தும் முதலமைச்சர் விஜய்யின் கவனத்திற்கும் ஒப்புதலுக்கும் சென்றுதான் எடுக்கப்படுகின்றனவா அல்லது அவருக்குத் தெரியாமலேயே மூத்த அதிகாரிகளால் நடைமுறைப்படுத்தப்படுகின்றனவா என்ற கேள்வியையும் அண்ணாமலை எழுப்பியுள்ளார். அவசர அவசரமாக அரசாணைகளை வெளியிட்டுவிட்டு, மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியதும் அவற்றை வாபஸ் பெறுவது ஒரு பொறுப்பான அரசுக்கு அழகல்ல என்றும், அரசாங்கத்தின் பின்னணியில் இருந்து இயங்குவது யார் என்ற சந்தேகத்தை இது மக்கள் மத்தியில் விதைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, ஒரு மாநில அரசு கொள்கை சார்ந்த முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக, அதன் சட்டரீதியான மற்றும் நிர்வாகரீதியான விளைவுகளையும், பொதுமக்கள் மீது அது ஏற்படுத்தும் தாக்கங்களையும் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். இனிவருங்காலங்களிலாவது அவசரப்பட்டு முடிவுகளை எடுத்துப் பின்னர் பின்வாங்குவதைத் தவிர்த்து, முடிவெடுக்கும் நடைமுறையில் தவெக அரசு கூடுதல் கவனமும், வெளிப்படைத்தன்மையும், பொறுப்புணர்வும் காட்ட வேண்டும் என அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.
