ஜப்பானில் வசித்து வரும் சோனம் மிதா என்ற இந்தியப் பெண், மழையில் மிதிவண்டி ஓட்டிச் செல்லும்போது நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளானார். இதில் அவருக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதுடன், அவரது மிதிவண்டியின் கைப்பிடியும் உடைந்ததோடு, ஐபோன் திரையிலும் விரிசல் ஏற்பட்டது. காயங்களுக்கு முதலுதவி செய்துகொண்ட பிறகு, மதிய உணவின் போது உடைந்த தன் மிதிவண்டியைச் சரிசெய்வதற்காக அருகில் உள்ள ஒரு பழுதுபார்க்கும் கடைக்கு அவர் எடுத்துச் சென்றார்.
பொதுவாக ஜப்பானில் மிதிவண்டி பழுதுபார்ப்பிற்குப் பணம் வசூலிக்கப்படும் என்பதால், அதற்கான கட்டணத்தைச் செலுத்த சோனம் தயாராக இருந்தார். ஆனால், அந்தக்கடைக்காரர் மிதிவண்டியைப் பார்ப்பதற்கு முன்பாகவே சோனமிடம் “உங்களுக்கு எதுவும் காயமில்லைதானே?” எனப் பதற்றத்துடன் நலம் விசாரித்தார். பின்னர் மிதிவண்டியை இலவசமாகவே சரிசெய்து கொடுத்தார். எவ்வளவு கட்டணம் எனக் கேட்டதற்கு “பணம் எதுவும் வேண்டாம்” என்று மறுத்து, மழைக்காலத்தில் கவனமாகச் செல்லுமாறு சோனமுக்கு அன்புடன் அறிவுரை கூறினார்.
https://www.instagram.com/reel/DdQ5FoPT11O/?utm_source=ig_web_button_share_sheet
அந்தக் கடைக்காரரின் மனிதநேயத்தால் நெகிழ்ந்துபோன சோனம், உடனடியாக ஒரு இந்திய உணவகத்திற்குச் சென்று அவருக்கு உணவை வாங்கி எடுத்துக்கொண்டு மழையிலேயே மீண்டும் அந்தக் கடைக்குச் சென்றார். கடையைக் கண்டதும் சோனம் மீண்டும் விழுந்துவிட்டாரோ என்று கவலைப்பட்ட கடைக்காரருக்கு, அவர் உணவை பரிசாக வழங்கியதும் அவர் உணர்ச்சிவசப்பட்டு மகிழ்ச்சியடைந்தார். இந்தச் சம்பவம் இணையத்தில் பலரது இதயங்களையும் தொட்டு வைரலாகி வருகிறது.
