இந்தியாவைச் சேர்ந்த பிரபல யூடியூபரும் பயண வழிகாட்டியுமான பரம்வீர் சிங் பெனிவால், அமெரிக்காவிலுள்ள லாஸ் வேகஸ் நகருக்குச் சென்று அங்குள்ள நிகழ்வுகளை வீடியோவாகப் பதிவு செய்துகொண்டிருந்தார். அப்போது அவரை அணுகிய இரண்டு நபர், அவரை கேலி செய்யும் நோக்கில், “உனக்கு எங்களிடம் வேலை செய்ய விருப்பமா? எங்களிடம் 7-ஈலெவன் கடைகள் உள்ளன, அதில் காசாளராகச் சேருகிறாயா?” என்று இனவெறித் தொனியுடன் கேட்டுள்ளனர். அமெரிக்காவில் உள்ள இதுபோன்ற கடைகளில் பெரும்பாலான இந்தியர்கள் பணிபுரிவதை மையமாக வைத்து, அவர்கள் இந்த இனவெறி சார்ந்த கிண்டலைச் செய்துள்ளனர்.
தன்னை லைவ் ஸ்ட்ரீமிங் செய்துகொண்டே கிண்டல் செய்த அந்த நபர்களின் பேச்சைக் கேட்டுத் தயங்கிப் பின்வாங்காத பரம்வீர், உடனே அவர்களுக்குப் பதிலடி கொடுக்கத் தொடங்கினார். “நீங்களெல்லாம் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள்?” என்று கேட்ட பரம்வீர், அவர்கள் “மிக அதிகமாக” என்று கூறியதும், அந்த நபர் அணிந்திருந்த போலி கழுத்துச் சங்கிலியைச் சுட்டிக்காட்டி, “அடுத்த முறை போலி சங்கிலியை வாங்குவதற்குப் பதிலாக உண்மையான நகைகளில் முதலீடு செய்யுங்கள்” எனப் பதிலடி கொடுத்து அவர்களின் வாயை அடைத்தார். பரம்வீரின் இந்தத் திடீர் சாதுரியமான பதிலைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த நபர்கள், பதற்றத்தில் “வேண்டாம், வேண்டாம்” எனக் கூறியபடி பின்வாங்கிச் சென்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பரம்வீரின் தைரியமான செயலையும், அவரது சுடச்சுட பதிலடியையும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். வெளிநாடுகளில் இந்தியர்கள் சந்திக்கும் இதுபோன்ற இனவெறித் தாக்குதல்களுக்கு பயப்படாமல், அமைதியாகவும் அதே சமயம் கம்பீரமாகவும் பதிலடி கொடுத்து நாட்டின் சுயமரியாதையைக் காத்ததாகப் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
