ராஞ்சியில் உள்ள மதுபானக் கடைக்குள் புகுந்த தாகமுள்ள குரங்கு ஒன்று, அங்குள்ள பாட்டிலில் நீர் இருப்பதாக நினைத்து அதை உடைத்துக் குடித்துள்ள நிகழ்வு மனிதர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அது நீர் அல்ல, மதுபானம் என்பதை அறியாத அக்குரங்கு, முழு பாட்டிலையும் குடித்ததால் போதை தலைக்கேறி அக் கடையின் ஒரு மூலையிலேயே மயங்கி விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக் குழுவினர், மயக்கமடைந்த குரங்கைப் பாதுகாப்பாக மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மீட்புக் குழுவினர் குரங்கை ஆய்வு செய்தபோது, அது முழு மதுபான பாட்டிலையும் குடித்திருப்பதோடு, அது கர்ப்பிணி குரங்கு என்பதும் தெரியவந்தது. இதன் தீவிரத்தைப் உணர்ந்த அவர்கள், குரங்கிற்கு மேலும் பதற்றமோ பாதிப்போ ஏற்படாத வகையில், அதை அமைதியாகத் தங்களது வாகனத்தில் ஏற்றி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தாய்க்கும் அதன் வயிற்றில் வளரும் குட்டிக்கும் இந்த மதுபானம் எந்த மாதிரியான தீங்கை விளைவித்துள்ளது என்பதை அறிய அங்குத் தீவிரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
உயிரினங்கள் எதுவாக இருந்தாலும், மனிதர்கள் முதல் விலங்குகள் வரை அனைவரும் நலமாக வாழ வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். அறியாமையால் நடந்த இந்த அசம்பாவிதத்தில் இருந்து அந்தத் தாய் குரங்கும், அதன் வயிற்றில் உள்ள குட்டியும் எவ்விதப் பாதிப்பும் இன்றி பூரண குணமடைந்து மீண்டும் இயற்கை சூழலுக்குத் திரும்ப வேண்டும் எனப் பலரும் வேண்டிக் கொள்கின்றனர்.
