கர்நாடக மாநிலம் ஹாவேரி மாவட்டம் ஹானகல் தாலுகா கூசனூர் கிராமத்தைச் சேர்ந்த பிரேமா படிகேர் (55) மற்றும் அவரது மகன் அவினாஷ் படிகேர் (35) ஆகிய இருவரும் நிலத் தகராறில் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளனர். பிரேமா சிர்சியில் உள்ள கர்நாடக மின்சார வாரியத்தில் பணியாற்றி வந்தவர், அவினாஷ் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வந்தார்.
கூசனூர் கிராமத்தில் உள்ள ஒரு சொத்து தொடர்பாகப் பிரேமாவிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த திரகய்யா மற்றும் பசவராஜ் ஆகியோருக்கும் இடையே கடந்த 20 ஆண்டுகளாகத் தகராறு நீடித்து வந்துள்ளது. ஊர்ப் பெரியவர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்றது. சமீபத்தில் இந்த வழக்கில் நீதிமன்றம் பிரேமா மற்றும் அவினாஷிற்குச் சாதகமாகத் தீர்ப்பளித்தது.
நீதிமன்ற உத்தரவின்படி சொத்தைக் கையகப்படுத்தத் தாய் மற்றும் மகன் இருவரும் கூசனூர் கிராமத்திற்கு வந்தபோது, சாலையில் வைத்து எதிர்தரப்பினர் அவர்களை வழிமறித்து சரமாரியாகத் தாக்கி கொடூரமாகக் கொலை செய்தனர். கொலையாளிகள் தாக்குதலுக்குப் பிறகு தப்பியோடாமல், கொடூரமாகப் பிணமாகக் கிடந்த உடல்களின் அருகிலேயே அமர்ந்து உணவு சாப்பிட்டதாகக் கூறப்படும் தகவல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாவேரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் யசோதா வந்தகோடி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியதுடன், போலிஸார் வழக்கப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
