தமிழக அரசியலில் தவெக தலைவர் விஜய்யின் சமீபத்திய பேச்சுக்கள் மற்றும் செயல்பாடுகள் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். 2021 சட்டமன்றத் தேர்தலின் போது கருப்பு சிவப்பு நிற சைக்கிளில் சென்று திமுகவின் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்த விஜய், தற்போது முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை ‘ஸ்வீட் அங்கிள்’ என்று புகழ்ந்து பாடுவதாகச் சுட்டிக்காட்டினார். திமுகவை ‘தீய சக்தி’ என்று விமர்சித்துவிட்டு, அதே வேளையில் ஸ்டாலினுடன் ரகசிய உடன்பாடு வைத்திருப்பது போன்ற தோற்றத்தை விஜய் உருவாக்குவது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், கூட்டணி கட்சிகளுடன் ஆட்சி அமைத்த தவெக, தற்போது குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களைக் குதிரை பேரம் மூலம் தங்கள் பக்கம் இழுத்துள்ளதாக உதயகுமார் குற்றம் சாட்டினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களைத் தூண்டிவிட்டு ராஜினாமா செய்ய வைத்து, அந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரவழைத்திருப்பது ஜனநாயகத்திற்குச் செய்யப்பட்ட பச்சை துரோகம் என்றும், தனது ரகசிய திட்டத்தை மறைக்கவே விஜய் தற்போது மதுராந்தகம் கூட்டத்தில் கோயபல்ஸ் பாணியில் பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் என்றும் அவர் சாடினார்.
மேலும், ஆட்சியின் குறுகிய காலத்திலேயே ரூ.40,000 கோடி கடன் வாங்கியுள்ள தவெக அரசு, அத நியாயப்படுத்த விஜய் அளிக்கும் விளக்கங்கள் மக்கள் மத்தியில் அவர் வைத்திருந்த நம்பிக்கையை முற்றிலும் பொய்க்கச் செய்துள்ளதாக உதயகுமார் கூறினார். எதிர்கட்சியாக இருந்தபோது கடன் வாங்குவதைக் கண்டித்துப் பேசிய விஜய், இப்போது கடன் வாங்குவதற்கு ‘அரசியல் விஞ்ஞானி’ போல் விளக்கம் அளிப்பது நகைப்பிற்குரியது என்றார். அதிகாரத்திற்கும் பதவிக்கும் ஆசைப்பட்டு தவெகவிற்குச் செல்லும் நிர்வாகிகள், எதிர்காலத்தில் அந்த கட்சி பின்னடைவைச் சந்திக்கும் போது முதலில் ஓடிவிடுவார்கள் என்றும் அவர் எச்சரித்தார்.
எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா போன்ற மாபெரும் தலைவர்கள் என்றுமே திமுக தலைவர்களை ‘ஸ்வீட் அங்கிள்’ என்று அழைத்து அரசியல் செய்ததில்லை என்பதை நினைவூட்டிய அவர், அதிமுகவின் தொண்டர்கள் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் கட்சியின் விசுவாசிகளாக மட்டுமே இருப்பார்கள் எனத் தெரிவித்தார். வரவிருக்கும் தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல்களில் மக்கள் இரட்டை இலைச் சின்னத்திற்கு வாக்களித்து தவெகவிற்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும், ‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’ என்றும் ஆர்.பி. உதயகுமார் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
