மும்பையில் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள பயணச்சீட்டு வழங்கும் கட்டணப் பெட்டியின் மீது பூனை ஒன்று மிகவும் நிம்மதியாகத் தூங்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி மக்களின் இதயங்களை வென்று வருகிறது. “தி ஃப்ரீ பிரஸ் ஜர்னல்” வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், சுற்றியுள்ள மனிதர்களின் நடமாட்டத்தைப் பற்றியோ அல்லது சத்தத்தைப் பற்றியோ எந்தக் கவலையுமின்றி அந்த பூனை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறது.
பயணிகள் பலர் அந்தப் பாதையைக் கடந்து சென்றபோதிலும், அந்தப் பூனை எதற்கும் கலங்காமல் தனக்கான ஒரு சௌகரியமான இடமாக அதை மாற்றிக் கொண்டு தூங்குகிறது. மெட்ரோ ஊழியர்களும், அந்த இடத்தைக் கடந்த பயணிகளும்கூட பூனையின் தூக்கத்திற்கு எந்த இடையூறும் செய்யாமல் அதை அழகாகப் பார்த்து ரசித்தபடி கடந்து செல்கின்றனர். இதைப் பார்த்த ஒருவர் அதைத் தனது மொபைலில் வீடியோவாகப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து, ஏராளமான இணையவாசிகள் இதற்குத் தங்களது அன்பைப் பொழிந்து கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். “மும்பை மெட்ரோவின் மிகச் சிறந்த அதிகாரி இவர்தான்” என்றும், “மெட்ரோவின் சலசலப்புக்கு மத்தியிலும் இவ்வளவு அமைதியாகத் தூங்க மும்பை பூனைகளால் மட்டுமே முடியும்” என்றும் நெட்டிசன்கள் நகைச்சுவையாகவும் செல்லமாகவும் கருத்து தெரிவித்து வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.
