“ஜெம் வீரமணி வழக்கில் தவெக போட்ட ‘போலி வேஷம்’?”…. சிபிஎம் சண்முகத்தின் பகீர் வாக்குமூலம்…. நீதிமன்றத்தில் அம்பலமான ரகசிய அறிக்கை….!

By Nanthini on புரட்டாதி 25, 2026

Spread the love

பாலியல் குற்றவாளி ஜெம் வீரமணி வழக்கை தமிழக அரசுதான் வெளிக்கொண்டு வந்தது என்று கூறுவது முற்றிலும் தவறானது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “உண்மையில் இந்த வழக்கை தற்போதைய அரசு முடித்து வைக்கவே முயற்சித்தது. ஆனால், நீதிமன்றத்தின் தலையீட்டால்தான் தற்போது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கை நேர்மையான முறையில் தானாகவே முன்வந்து நடத்துவது போன்ற ஒரு போலித் தோற்றத்தை அரசு உருவாக்க முயல்கிறது” என்று கடுமையாகச் சாடினார்.

தங்கள் தரப்பு குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை விவரித்த சண்முகம், “கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி போக்சோ (POCSO) நீதிமன்றத்தில் அரசு சமர்ப்பித்த அறிக்கையிலேயே, இந்த வழக்கை முடித்துக் கொள்வது என்ற வழியில்தான் கருத்துக்கள் இடம்பெற்றிருந்தன. எனவே, தங்களால்தான் வழக்கு தீவிரப்படுத்தப்பட்டது என்று அரசு தரப்பினர் சொல்வதற்கு எந்தவித அடிப்படையும் இல்லை என்பதை ஊடகங்கள் வாயிலாக மக்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன்” என்று சுட்டிக்காட்டினார்.

   

இறுதியாக, இந்த வழக்கில் நியாயம் கிடைப்பதற்கான உண்மையான காரணி குறித்துப் பேசிய அவர், “ஜெம் வீரமணி வழக்கு தீவிரமடைந்ததற்கும், இதில் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டதற்கும் போக்சோ நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதி எடுத்த உறுதியான நடவடிக்கைகளே முழு முதல் காரணமாகும். நீதிபதியின் தலையீடு இல்லையென்றால் இந்த வழக்கு அப்போதே மூடி மறைக்கப்பட்டிருக்கும்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.