அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரான பிரீதேஷ் லக்கானி என்பவர், தனது இரண்டு வயது மகளின் முன்பள்ளி சேர்க்கைக்காக ஒரு பள்ளி ரூ.1.5 லட்சம் ‘நன்கொடை’ கேட்டதாக சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ள குற்றச்சாட்டு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது மகளுக்கு ஒரே பள்ளியில் தொடர்ச்சியாகக் கல்வியைக் கொடுக்க விரும்பி நல்ல பள்ளியைத் தேடியபோது, அங்குள்ள மற்றொரு பெற்றோர் இந்த ரூ.1.5 லட்சம் நன்கொடை சேர்க்கைக்கு மிகவும் கட்டாயமானது என்ற உண்மையைத் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த நன்கொடைத் தொகையைச் செலுத்த மறுத்தால், குழந்தையையும் பெற்றோரையும் தகுதித் தேர்வுக்கு உட்படுத்தி, வேண்டுமென்றே அதில் ‘தோல்வி’ அடையச் செய்து அதைக் காரணம் காட்டி இன்னும் கூடுதல் தொகையைக் கட்டணமாக வசூலிப்பார்கள் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுமட்டுமன்றி, முதல் ஆண்டுக்கான சாதாரண சேர்க்கைக் கட்டணமாக மட்டுமே ரூ.1.25 லட்சம் வரை கேட்கப்படுவதாகவும் அவர் வேதனையுடன் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
“2 வயதுக் குழந்தைக்கு எதற்கு இவ்வளவு பெரிய தொகை மற்றும் தேர்வுகள்?” என இணையவாசிகள் கடுமையாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும், குழந்தைப் பருவத்திலேயே இதுபோன்ற மன அழுத்தத்தைக் கொடுப்பதற்குப் பதிலாகப் பெற்றோர் வீட்டில் வைத்தே கல்வி கற்பிக்கும் முறையைப் பின்பற்றுவது சிறந்தது என நெட்டிசன்கள் தங்களது காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
