திருச்சி தென்னூர் வெள்ளாள தெருவைச் சேர்ந்தவர் முஹம்மது பாரூக் (32). ஆட்டோ மெக்கானிக்காகப் பணியாற்றி வந்த இவர், மீன் கடையில் வேலை பார்த்து வரும் தனது தம்பியான அசார் (28) என்பவருடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை, வீட்டு வேலை முடிந்து வீடு திரும்பிய இவர்களது தாய் நிஷா, வீட்டில் பாரூக் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அலறித் துடித்துள்ளார். தாயின் அழுகைச் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக இது குறித்துக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தில்லை நகர் காவல் நிலையப் போலீஸார், உடலைக் கைப்பற்றி முதல்கட்ட விசாரணையைத் தொடங்கினர். மேலும், திருச்சி மாநகர காவல் துறை துணை ஆணையர் அரவிந்த் பனாவத் மற்றும் தில்லை நகர் உதவி ஆணையர் விஜயகுமார் ஆகியோர் நேரில் வந்து சம்பவ இடத்தைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
போலீஸார் நடத்திய விசாரணையில், சகோதரர்கள் இருவருக்கும் போதைப்பழக்கம் இருந்தது தெரியவந்துள்ளது. குறிப்பாகத் தம்பி அசார், கஞ்சா மற்றும் மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், மதுபோதையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும் தெரியவந்தது. சம்பவத்தன்றும் இருவருக்கும் இடையே போதையில் தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த அசார் வீட்டில் இருந்த கத்தியால் அண்ணன் பாரூக்கின் கழுத்தை அறுத்துக் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. அதனையடுத்து அசாரைப் பிடித்துப் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
