“விஜய்யுடன் மேடையேறத் தடை?”…. கூட்டணியை அலறவிட்ட தவெக தலைமை…. கடுப்பில் திருமாவளவன், வைகோ….!

By Nanthini on புரட்டாதி 23, 2026

Spread the love

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் களம், தவெக தலைமையிலான கூட்டணியில் வெடித்துள்ள புதிய சர்ச்சையால் மேலும் சூடபிடித்துள்ளது. அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில் தவெக சார்பில் களமிறக்கப்பட்டுள்ள மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமா ஆகிய இருவருமே அதிமுகவிலிருந்து வந்தவர்கள் என்பதால், தொகுதி மக்களிடையே ஏற்கனவே அதிருப்தி நிலவி வருகிறது. இந்தச் சூழலைச் சமாளிக்கவும், பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கவும் தமிழக முதல்வர் விஜய் கட்டாயம் நேரடிப் பிரச்சாரத்திற்கு வர வேண்டும் என்று வேட்பாளர்களும் கூட்டணி அமைச்சர்களும் தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, தவெக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் பொதுக்கூட்டம் மற்றும் பிரம்மாண்ட ‘ரோடு ஷோ’ என இரண்டு நாட்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளார். இதனிடையே, தவெக தலைமையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’யில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் மற்றும் மதிமுக ஆகிய முக்கியக் கட்சிகளின் தலைவர்கள், இந்த இடைத்தேர்தல் பொதுக்கூட்ட மேடையை விஜய்யுடன் பகிர்ந்து கொள்ள விருப்பம் தெரிவித்து தலைமைக்குக் கோரிக்கை வைத்திருந்தனர்.

   

ஆனால் கூட்டணித் தலைவர்களின் இந்தக் கோரிக்கையைத் தவெக தலைமை முற்றிலும் நிராகரித்துள்ளது. ‘முதல்வர் விஜய்யுடன் மேடையை நேரடியாகப் பகிர்ந்து கொள்ள எந்த வாய்ப்பும் இல்லை’ என்று தவெக தரப்பில் திட்டவட்டமாகப் பதிலளிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ள கூட்டணித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், விஜய்யின் இந்த அணுகுமுறையால் கடுமையான அப்செட்டில் இருப்பதாகக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்முறையாக ஒரு கூட்டணியை அமைத்து தேர்தலைச் சந்திக்கும் போதே, கூட்டணிக் கட்சிகளை இவ்வாறு அலட்சியப்படுத்துவது சரியல்ல என்ற முணுமுணுப்புகளும் எழத் தொடங்கியுள்ளன.

   

குறிப்பாக, மதுராந்தகம் தொகுதியில் விசிகவிற்கு கணிசமான வாக்கு வங்கி இருந்தபோதிலும், அக்கட்சியின் தலைவர் திருமாவளவனுடன் கூட மேடையேற விஜய் விரும்பவில்லை என்பது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அதோடு, வழக்கம் போல மேடையில் வேட்பாளர்களின் பெயர்களைக் கூடப் பிரத்யேகமாகக் குறிப்பிடாமல், பொதுவான முறையில் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்குமாறு மட்டும் பேசிவிட்டுச் செல்லவே விஜய் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ‘தவெக கூட்டணி என்பது வெறும் பெயரளவில் மட்டுமே இயங்குகிறதா?’ என்று கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பகிரங்கமாகவே புலம்பத் தொடங்கியுள்ளனர்.