வரவிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு “புதிய புரட்சி கழகம்” தனது முழுமையான ஆதரவை அறிவித்துள்ளது. இதனையொட்டி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை, புதிய புரட்சி கழகத்தின் தலைவர் ஓ.இ.சங்கர் மற்றும் பொதுச்செயலாளர் கோல்டன் கோபி ஆகியோர் தலைமையில் மாநில நிர்வாகிகள் நேரில் சந்தித்துப் பேசினர். இச்சந்திப்பின் போது, அறிவிக்கப்பட்டுள்ள கூட்டணி வேட்பாளர்களின் அமோக வெற்றிக்குத் தங்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் களத்தில் நின்று முழுமையாகப் பாடுபடுவார்கள் என்று உறுதி அளித்தனர்.
இந்நிகழ்வில் புதிய புரட்சி கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் தரமணி வேலு, தலைமை நிலையச் செயலாளர் மடையத்தூர் துரைசாமி, மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பி.ஹரிகிருஷ்ணன், கொள்கைப் பரப்புச் செயலாளர் வழக்கறிஞர் கேட் சேகர், கமலஹாசன் செல்வமணி, உமா மகேஷ்வரன், மாநிலச் செயலாளர் அஜிஸ்ராசா, மாவட்டச் செயலாளர் மதுராந்தகம் ஜி.கே.சேகர், மாவட்டத் தலைவர் வி.எம்.மாரிமுத்து, பொருளாளர் இளங்கோ மற்றும் அமைப்பாளர் மணிகா ஆகிய முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். மேலும், பனையூர் பாபுவும் உடனிருந்த இந்த ஆதரவு அறிவிப்பு, இடைத்தேர்தல் களத்தில் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.
