மகாராஷ்டிராவின் தானே மாவட்டம் கல்யாண் பகுதியில், தனது இரண்டு வயது மகனையும் மனைவியையும் கொடூரமாகத் தாக்கிய நபர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த சிறுவன் வீட்டில் தன்னைத் தவிர்த்து வந்ததால் ஆத்திரமடைந்த அக் குற்றவாளி, சிறுவனைத் தரையில் தள்ளி, அவனது கையை எரியும் சூடான பிளேட்டில் வைத்துத் தீய்த்துக் கொடூரமாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
குழந்தையைத் தாக்கியதோடு மட்டுமின்றி, அதைத் தடுக்க முயன்ற தனது மனைவியையும் அந்த நபர் விளக்குமாறால் கடுமையாகத் தாக்கியுள்ளார். இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த சிறுவனுக்கும் அவனது தாய்க்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கல்யாண் காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தலைமறைவாக உள்ள அந்த நபரைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.
