“பிளாக் டிக்கெட் போல மீனாட்சியம்மன் கோயில் பாஸ்?”…. ரூ.25,000-க்கு விஐபி பாஸ்…. தவெக அரசுக்கு எதிராக அண்ணாமலை அடித்த தடாலடி டைம்பாம்….!

By Nanthini on புரட்டாதி 20, 2026

Spread the love

மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் 17 ஆண்டுகளுக்குப் பிறகு மிக விமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு விழாவில், கடுமையான குளறுபடிகள் அரங்கேறியுள்ளதாகப் பல்வேறு தரப்பினரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். குறிப்பாக, சாமானிய பக்தர்கள் கோபுர தரிசனம் செய்யக்கூட அனுமதிக்கப்படாத நிலையில், விஐபி பாஸ்கள் ரூ.2,500 முதல் ரூ.25,000 வரை முறைகேடாக விற்பனை செய்யப்பட்டதாக மக்கள் கொந்தளித்துள்ளனர். மேலும், கோபுரங்களின் மீது தெளிக்கப்பட்ட புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டதும், மாட வீதிகள் முழுவதும் அதிகாரிகளின் வாகனங்களால் முடக்கப்பட்டதும் ஆன்மீக அன்பர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில் மதுரைக்கு வருகை தந்த ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் தலைவர் அண்ணாமலை, குடமுழுக்கு விழாவில் நடந்த நிகழ்வுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். சினிமா திரையரங்குகளில் பிளாக்கில் டிக்கெட் விற்பது போல, ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு பாஸ்களை தவெகவினர் பிளாக்கில் விற்பனை செய்ததாகச் சாடினார். அத்துடன், சாதாரண மக்களின் வழிபாட்டு உரிமையைப் பறிக்கும் வகையிலும், விஐபிக்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கும் வகையிலும் விழா அமைந்திருந்ததாகக் குற்றம்சாட்டினார்.

   

கோயில் நிர்வாகத்தில் அரசு மற்றும் காவல்துறையின் தலையீடுகள் குறித்தும் அவர் தனது அதிருப்தியைப் பதிவு செய்தார். திரையரங்குகளில் செல்போன் டார்ச் அடிப்பதைத் தடுக்க முடியாது என்பதற்காக அனைவரது செல்போன்களையும் பறிமுதல் செய்ய முடியாதது போல, கோயிலுக்கு வரும் பக்தர்களின் செல்போன்களை முழுமையாகப் பிடுங்கி வைப்பது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்பினார். மேலும், சபாநாயகர் உட்படப் பதவியில் இருப்பவர்கள் சட்டசபையில் பைபிள் படிப்பது போன்ற செயல்கள் மூலம் தங்களின் மத அடையாளத்தைக் காட்டுவதில் போட்டி போடுவது இந்துக்களின் உரிமைகளுக்குச் சிக்கலை உருவாக்குவதாகத் தெரிவித்தார்.

   

தங்களது ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட அனைத்து மதத்தினரும் பெரும்பான்மையாக இணைந்து செயல்படுவதைச் சுட்டிக்காட்டிய அவர், எதிர்காலத்தில் தங்கள் ஆட்சி அமையும் போது தமிழ்நாட்டில் இந்து அறநிலையத்துறை என்ற அமைப்பே இருக்காது என்று உறுதியளித்தார். ஆன்மீக தலங்களின் புனிதத்தையும், பக்தர்களின் வழிபாட்டு உரிமையையும் பாதுகாக்கும் வகையில் கோயில்கள் அரசு பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு, அனைத்து மதத்தினரையும் சமமாக மதிக்கும் வெளிப்படையான நிர்வாகம் உருவாக்கப்படும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.