“நல்லவேளை தப்பிச்சேன்”…. கொளத்தூர் மக்களுக்கு கையெடுத்து கும்பிட்ட ஸ்டாலின்… இடைத்தேர்தல் மேடையில் ஆளுங்கட்சிக்கு ஸ்டாலின் வைத்த செக்….!

By Nanthini on புரட்டாதி 20, 2026

Spread the love

திமுக முப்பெரும் விழாவில் உரையாற்றிய முன்னாள் முதலமைச்சரும் அக்கட்சியின் தலைவருமான மு.க. ஸ்டாலின், தங்களை வெற்றி பெறச் செய்த கொளத்தூர் தொகுதி மக்களுக்குக் கோடான கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார். சட்டமன்றத்தில் நடக்கும் கொடுமைகளைப் பார்க்காமல் தப்பியதற்கு கொளத்தூர் மக்களே காரணம் எனக் குறிப்பிட்ட அவர், ‘ரீல்ஸ்’ வெறி பிடித்த ஆளுங்கட்சியினரின் நடவடிக்கைகளால் நூற்றாண்டு காலப் பெருமை கொண்ட தமிழகச் சட்டமன்றம் தன் மாண்பை இழந்து நிற்பதாகக் கடுமையாகச் சாடினார்.

சட்டமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய நியாயமான கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியாமல் ஆளுங்கட்சியினர் திணறுவதாகச் சுட்டிக்காட்டிய ஸ்டாலின், திசைதிருப்புவதற்காகவே மிசா மற்றும் சர்க்காரியா கமிஷன் குறித்து அவதூறுகளைப் பரப்புவதாகக் குற்றம்சாட்டினார். “எனது மிசா கைதை இங்கு எவனுக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று ஆவேசமாக முழங்கிய அவர், கடந்த தேர்தலில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றிய ஆளுங்கட்சிக்கும் நமக்கும் வெறும் 17 லட்சம் வாக்குகள் மட்டுமே வித்தியாசம் என்றும், எதிரியைச் சரியாகக் கணித்துப் பணியாற்றியிருந்தால் இந்தத் தோல்வியே ஏற்பட்டிருக்காது என்றும் சுட்டிக்காட்டினார்.

   

தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் கூட்டணிக் கட்சிகளை நம்பாமல் குதிரைப் பேரத்தில் ஈடுபடுவதாகச் சாடிய மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் தினமும் ‘ஷூட்டிங் மூடில்’ மட்டுமே இருக்கிறார் என்று எள்ளி நகையாடினார். பஞ்ச் டயலாக், வெளிநாட்டுப் பயணம் என எல்லாமே போலி நாடகம் என்று குறிப்பிட்ட அவர், வாக்குறுதிகளைப் பற்றிக் கேட்டால் அவதூறு பரப்பும் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற பெயரை மாற்றி ‘தமிழக ரீல்ஸ் கழகம்’ என்று வைக்கலாம் என விமர்சித்தார். மேலும், தமிழகத்தில் மின்வெட்டுக்கும் அரிவாள் வெட்டுக்கும் தான் போட்டி நடப்பதாகவும், சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து ஒரே நாளில் 8 கொலைகள் நடக்கும் அளவுக்கு ஆட்சி அவலநிலையில் உள்ளதாகவும் சாடினார்.

   

ஆளுங்கட்சியின் திமிர்த்தனத்திற்கும் ஆணவத்திற்கும் வரவிருக்கும் இடைத்தேர்தலில் பொதுமக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். ஏமாற்றுபவர்களை மக்கள் எப்போதும் நம்ப மாட்டார்கள் என்பதை உணர்த்தும் வகையில், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி வாக்காளர்கள் ஆளுங்கட்சிக்குச் சரியான பதிலடி கொடுத்து தி.மு.க-விற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனத் தனது உரையில் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.