ஏன்டி என் கூட பேச மாட்டியா?… பட்டப்பகலில் மருந்தகத்திற்குள் நுழைந்த இளைஞர்…. அடுத்து நடந்த கொடூரம்… பண்ருட்டியில் பதறவைக்கும் சம்பவம்….!

By Nanthini on புரட்டாதி 19, 2026

Spread the love

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முதலமைச்சர் மருந்தகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த இளம்பெண்ணை, அவரது அத்தை மகனே கத்தியால் சரமாரியாகக் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. காடாம்புலியூர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய திவ்யா என்பவரே இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர சம்பவத்தில், குற்றச் செயலில் ஈடுபட்ட இளைஞரை பொதுமக்கள் துரிதமாகச் செயல்பட்டு மடக்கிப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட திவ்யாவும், தாக்குதல் நடத்திய 25 வயதுடைய சந்தோஷ் என்பவரும் உறவினர்கள் (அத்தை மகன்) ஆவர். கடந்த 6 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படும் நிலையில், பொறியியல் பட்டதாரியான சந்தோஷ் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். திவ்யா பண்ருட்டி காமராஜர் நகரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அருகிலுள்ள முதலமைச்சர் மருந்தகத்தில் பணிபுரிந்து வந்தார். இதனிடையே, சமீபகாலமாக திவ்யா சந்தோஷிடம் பேசுவதைத் தவிர்த்து வந்ததாகவும், அவரது தொலைபேசி அழைப்புகளை ஏற்க மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது.

   

இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ், நேற்று (செப்டம்பர் 18) பகல் வேளையில் திவ்யா பணியிலிருந்த மருந்தகத்திற்கு நேரடியாகச் சென்றுள்ளார். அங்கு, “தன்னிடம் ஏன் பேசுவதில்லை?” எனக் கேட்டு திவ்யாவிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். திவ்யாவிடமிருந்து சரியான பதில் வராததால் மேலும் ஆத்திரமடைந்த சந்தோஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திவ்யாவின் கழுத்து உள்ளிட்ட உடலின் 6 இடங்களில் சரமாரியாகக் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த திவ்யா ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து அலறியுள்ளார்.

   

திவ்யாவின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினரும் பொதுமக்களும் உடனடியாகச் செயல்பட்டு சந்தோஷை தப்பவிடாமல் மடக்கிப் பிடித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பண்ருட்டி காவல்துறையினர், பொதுமக்களிடம் இருந்த சந்தோஷைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, ரத்த வெள்ளத்தில் கிடந்த திவ்யாவை மீட்ட பொதுமக்கள் அவரை உடனடியாக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அவர் கடலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.