இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் விமரிசையாக நடைபெற்றது. தயாரிப்பாளராகவும் இப்படத்தை வழங்கி வரும் இயக்குநர் அட்லீ விழாவில் கலந்து கொண்டு பேசிய பேச்சு, சினிமா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பேசிய விஜய் சேதுபதி, “வாக்குறுதிகளை அள்ளி வீசிவிட்டு அதை எதிர்கொள்ள முடியாமல் ஓடுபவன் தலைவனாக இருக்கக் கூடாது” என்று கூறியிருந்தார். இது மறைமுகமாக அரசியல் களம் கண்டுள்ள விஜய் அண்ணனைத் தாக்குவதாகச் சர்ச்சைகள் எழுந்தன.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் ‘பத்தா’ மேடையில் பேசிய அட்லீ, “எனது இப்போதைய வளர்ச்சிக்கு முழு முதல் காரணம் என் அண்ணன் தளபதி விஜய் தான். சமூக வலைதளங்களில் ‘இவர் அவரைச் சொல்கிறார், அவர் இவரைச் சொல்கிறார்’ என்றெல்லாம் எதுவும் கிடையாது. எதையும் மறைமுகமாகப் பேசத் தேவையில்லை, சொல்ல வேண்டும் என்றால் நேரடியாகவே பேசிவிடலாம்” என்று விஜய் சேதுபதிக்கு நேருக்கு நேர் மாஸ் பதிலடி கொடுத்தார்.
மேலும், “ஊர் ஆயிரம் பேசத்தான் செய்யும், ஊர் வாயில் விழுந்து வாழ்வது முட்டாள்தனம். சிறிய சிறிய பொறிகளில் சிக்கிக் கொள்ளாமல் உங்கள் வழியில் சென்று கொண்டே இருங்கள். இன்றைய தலைமுறை அரசியலில் ஆர்வமாக இருப்பதற்கு விஜய் அண்ணன் தான் முக்கிய காரணம்” என்றும் அட்லீ உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார். அட்லீயின் இந்தத் தடாலடிப் பேச்சு இணையத்தில் காட்டுத்தீ போல பரவி பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
