சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 15 மாடிகளுடன் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகம் அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அரசின் இந்த முடிவிற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க அனுமதிக்கவே மாட்டோம். அங்கு ஒரு செங்கலைக் கூட எடுத்து வைக்க முடியாது.
இந்தத் தேவையில்லாத திட்டத்தை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என ஆவேசமாக எச்சரித்தார்.மேலும், ஓமந்தூரார் வளாகத்திற்குத் தலைமைச் செயலகத்தை மாற்றுவது குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், “தற்போது ஓமந்தூரார் அரசு மருத்துவமனை ஏழை எளிய மக்களின் பயன்பாட்டில் உள்ளதால், அதை மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றுவது பொருத்தமானதாக இருக்காது. அரசு மக்கள் பணத்தை வீணடிப்பதை நிறுத்திவிட்டு வேறு மாற்று வழிகளைப் பரிசீலிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
