திமுக, அதிமுகவுக்கு ஷாக்…. கம்யூனிஸ்ட்களின் ‘மாஸ்டர் பிளான்’… இடைத்தேர்தல் களத்தில் திடீர் திருப்பம்….. விஜய்க்கு காத்திருக்கும் அடுத்த சிக்கல்….!

By Nanthini on புரட்டாதி 14, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும்கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக களமிறங்க இடதுசாரிகள் தீவிரமாக ஆயத்தமாகி வருகின்றனர். கடந்த பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற 6 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால், இந்த இடைத்தேர்தல் மக்கள் மீது தேவையின்றி திணிக்கப்பட்டுள்ளது என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கோவையில் செய்தியாளர்களிடம் சாடினார். மக்கள் பிரதிநிதியின் மறைவால் வரும் வழக்கமான இடைத்தேர்தல் அல்ல இது எனக் குறிப்பிட்ட அவர், இந்த அரசியல் சூழலையும் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பையும் எதிர்கொள்ளும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தலைச் சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.

திமுக, அதிமுக, தவெக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் ஏற்கனவே தங்களது வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தில் களம் கண்டுள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்து போட்டியை ஐங்கோணப் போட்டியாக மாற்றியுள்ளன. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான தங்கள் வேட்பாளர்களை விரைவில் அறிவிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ள சண்முகம், பிரதான கூட்டணிகளில் இடம்பெறாத பிற அரசியல் கட்ச தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோர உள்ளதாகவும் கூறினார். “தமிழகம் இனி இடது பக்கம்” என்ற வலுவான முழக்கத்துடன் தேர்தலை எதிர்கொள்ளும் கம்யூனிஸ்ட்கள், உழைக்கும் மக்களின் குரலாக சட்டமன்றத்திற்குள் கூடுதல் பிரதிநிதிகளை அனுப்ப மக்கள் ஆதரவு தர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர்.

   

சட்டமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதை வரவேற்ற அதேவேளையில், ஆளும்கட்சியின் செயல்பாடுகளை விமர்சித்த கம்யூனிஸ்ட் தலைமை, மக்கள் நலன் சார்ந்த விவாதங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படாமல் நேரத்தை வீணடிக்கும் போக்கே அவையில் நிலவுவதாகக் குற்றம் சாட்டியது. சட்டமன்றத்தில் உள்ள நான்கு கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் மட்டுமே மக்கள் பிரச்சனைகளுக்காக முழுமையாக குரல் கொடுத்து வருவதாக சுட்டிக்காட்டிய சண்முகம், தவெக தலைமையிலான கூட்டணியிலோ அல்லது அமைச்சரவையிலோ கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் இடம்பெறாது என்பதை மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார். அரசியல் சூழலுக்கு ஏற்ப கூட்டணி நிலைப்பாடுகள் மாறினாலும், கொள்கைகளில் சமரசம் இல்லை என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

   

இந்த இடைத்தேர்தல் பிரச்சாரக் களத்தில் தவெக அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் தொழிலாளர் விரோதப் போக்குகளை மிகத் தீவிரமாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லப் போவதாக கம்யூனிஸ்ட்கள் எச்சரித்துள்ளனர். ஆளும் தவெக, முதன்மை எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக, அத்துடன் நாம் தமிழர் மற்றும் இடதுசாரிகள் என அனைத்துக் கட்சிகளும் தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்துவதால், அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவு தமிழக அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாகவும், தவெக அரசின் மீதான மக்கள் தீர்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.