வரவிருக்கும் இடைத்தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, மதுராந்தகம் தொகுதியில் கோ.ஜானகிராமன், தாராபுரம் தொகுதியில் மு.கார்த்திகா மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் ச.கார்த்திக் குமாரி ஆகியோர் நாதக சார்பில் போட்டியிடுகின்றனர். தேர்தல் களத்தில் தங்களது தனித்துவமான அரசியல் நிலையை மீண்டும் நிரூபிக்கும் வகையில், நாதக வேட்பாளர்கள் முழு வீச்சில் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.
ஏற்கெனவே இத்தொகுதிகளில் திமுக, அதிமுக, தவெக மற்றும் இடதுசாரி கட்சிகள் தீவிர களப்பணியாற்றி வரும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிப்பால் தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது. இதன் மூலம், வரும் இடைத்தேர்தலானது எவ்வித சமரசமுமின்றி பலப்பரீட்சை நடத்தும் ஐந்து முனைப் போட்டியாக உருவெடுத்துள்ளது. அனைத்து பிரதான கட்சிகளும் களத்தில் உள்ளதால், இத்தேர்தல் முடிவு பெரும் அரசியல் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
