தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், தமிழ்நாட்டில் ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ அமைப்பதற்கான ஆலோசனைகளைப் பெறவும் தமிழக முதலமைச்சர் விஜய் பிரிட்டனுக்கு அரசு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது, சில்வர்ஸ்டோனில் நடைபெறும் புகழ்பெற்ற ‘லீ மேன்ஸ் கப்’ சர்வதேசக் கார் பந்தயத்தை முதல்வர் விஜய் கொடியசைத்துத் தொடங்கி வைக்கவுள்ளார். இதில் நடிகரும் சர்வதேசக் கார் பந்தய வீரருமான அஜித் குமார் கலந்துகொண்டு போட்டியிடுகிறார்.
இந்தக் கார் பந்தயம் தொடர்பாக லண்டனில் செய்தியாளர்களைச் சந்தித்த அஜித் குமாரிடம் முதல்வர் விஜய் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டன. அதற்குப் பதிலளித்த அஜித், “முதலமைச்சர் விஜய் தனது பணிச்சுமைகளுக்கும் நெரிசலான வேலைகளுக்கும் மத்தியிலும் நேரம் ஒதுக்கி லண்டன் வந்துள்ளார். தமிழக அரசு இந்தியாவில் மோட்டார் விளையாட்டுத் துறையை மேம்படுத்தவும், அதனை வளர்த்தெடுக்கவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என்று நெகிழ்ச்சியுடன் பாராட்டு தெரிவித்தார்.
முன்னதாகத் தமிழகச் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ், தமிழகத்தில் உலகத் தரம் வாய்ந்த ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்’ உருவாக்கப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் விஜய் வெளியிட்டிருந்தார். இந்தத் திட்டத்தின் தொடர்ச்சியாகவே, உலகின் முன்னணி மோட்டார் பந்தய உள்கட்டமைப்பைக் கொண்ட பிரிட்டனின் சில்வர்ஸ்டோன் ரேசிங் சர்க்யூட்டை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளார். திரைத்துறை மற்றும் அரசியல் பயணங்களுக்கு அப்பால், இருவரின் இந்த சந்திப்பும் லண்டன் பயணமும் ரசிகர்களிடையேயும் விளையாட்டுத் துறையிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
