வேலூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், தனக்கே உரிய நகைச்சுவை மற்றும் நையாண்டி பாணியில் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். மு.க.ஸ்டாலின் மிசாவில் கைது செய்யப்பட்டது குறித்துச் சில அமைச்சர்கள் சமீபத்தில் பேசியது தொடர்பான கேள்விக்கு, “அய்யய்யய்யோ, கையெடுத்து கேட்டுக்கிறேன்… இந்த அமைச்சர்கள் பற்றியெல்லாம் என்கிட்டக் கேட்காதீங்க. பொதுவா கேளுங்க…” என்று கூறி நகைப்பை ஏற்படுத்தினார். மேலும் தொடர்ந்த அவர், ஒரு வாரத்திற்கு ஏழு நாட்கள் இருக்கிறது என்று கூடத் தெரியாத அளவிற்குப் பல அமைச்சர்கள் இருப்பதாகக் காட்டமாகவே விமர்சித்தார்.
அமைச்சர்களின் வரலாற்றுப் புரிதலைச் சுட்டிக்காட்டிய துரைமுருகன், “இஸ்மாயில் கமிஷன் அறிக்கையைப் படித்துப் பாருங்கள்; அதில் தளபதி ஸ்டாலின் மீதான வழக்கு குற்றப்பத்திரிகையே தெளிவாக இடம் பெற்றுள்ளது” என்று சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசியவர், தற்போதைய அமைச்சர்களுக்குச் சட்டமன்ற வழிகாட்டுதல்கள் (கைட்லைன்ஸ்) எதுவும் தெரியவில்லை என்றும், சட்டமன்றம் செயல்படும் விதத்தைப் பார்க்கும்போது அது ஒரு சட்டமன்றம் போல இல்லாமல், சினிமா சூட்டிங் செட் போல இருப்பதாகவும் கிண்டலாகவும் நறுக்குத்தெறித்தாற்போலும் விமர்சித்தார். துரைமுருகனின் இந்தப் பேட்டி தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
