தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ நிறுவனங்களில் காலியாக உள்ள 4,724 ஒப்பந்த மற்றும் தற்காலிகச் செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தேசிய சுகாதார இயக்கம் (NHM) வெளியிட்டுள்ளது. பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை, மருத்துவ மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்ககம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட முக்கியப் பிரிவுகளின் கீழ் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் ஆகிய இரண்டு மாவட்டங்களைத் தவிர்த்து, தமிழகத்தின் மற்ற அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தகுதியான நபர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற தனியார் நர்சிங் கல்லூரியில் GNM (General Nursing and Midwifery) அல்லது B.Sc Nursing பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், இந்திய நர்சிங் கவுன்சிலின் அங்கீகாரத்துடன் தமிழ்நாடு செவிலியர்கள் மற்றும் மகப்பேறு செவிலியர்கள் கவுன்சிலில் (Tamil Nadu Nurses and Midwives Council) கட்டாயமாகப் பதிவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு 50 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் nhm.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவங்களைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் தேவையான அனைத்துச் சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து, சம்பந்தப்பட்ட மாவட்ட சுகாதார அலுவலக முகவரிக்கு வருகிற செப்டம்பர் 25, 2026 அன்று மாலை 5:00 மணிக்குள் சென்று சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
