திடீர் திருப்பம்…. செல்வப்பெருந்தகையின் ரகசிய மூவ்?…. மீண்டும் திமுகவில் இணையப் போகிறாரா?…. தமிழக அரசியலில் அடுத்த டுவிஸ்ட்…!

By Nanthini on புரட்டாதி 11, 2026

Spread the love

தமிழக அரசியலில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகையின் சமீபத்திய பேச்சுகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. தவெக – காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பிரதமர் வேட்பாளர் குறித்த கருத்து வேறுபாடுகளும், தவெக தலைவர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் பேச்சுகளும் புயலைக் கிளப்பியுள்ளன. இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் உழைப்பையும், அவருக்கு காங்கிரஸ் சரியாக விசுவாசம் காட்டவில்லையோ என்ற தனது வேதனையையும் செல்வப்பெருந்தகை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருப்பது, அவர் காங்கிரஸில் இருந்து விலகி திமுகவில் இணையப் போகிறாரா என்ற ஊகங்களை தீவிரப்படுத்தியுள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவராக புதியதாகப் பொறுப்பேற்றுள்ள மாணிக்கம் தாகூர், தவெக கூட்டணியில் உறுதியாக இருந்து விஜய்யின் பிரதமர் வேட்பாளர் பேச்சுகளுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். ஆனால், ஆரம்பத்திலிருந்தே திமுக ஆதரவு நிலைப்ப்பாடு கொண்டவராகப் பார்க்கப்பட்ட செல்வப்பெருந்தகை, தவெகவுக்கு ஆதரவளித்த உட்கட்சி முடிவை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில் பேசியுள்ளார். “என்னை பிரதமராக்க வேண்டும் என ராகுலே நேராக வந்து கேட்பாரா?” என்றும், தவறான கணக்கீட்டால் அவமானப்பட்டு நிற்பதாகவும் அவர் கூறியிருப்பது, தவெக கூட்டணியில் இணைந்ததன் மீதான அவரது அதிருப்தியையே சுட்டிக்காட்டுகிறது.

   

அரசியல் பார்வையாளர்களின் கணிப்புப்படி, தவெக – காங்கிரஸ் உறவில் ஏற்பட்டுள்ள விரிசலும், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தவெக கூட்டணியில் காங்கிரஸுக்குப் பின்னடைவு ஏற்படலாம் என்ற அச்சமுமே செல்வப்பெருந்தகையின் இந்த நகர்வுக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. திமுக தலைவர் ஸ்டாலினுடன் நெருங்கிய தனிப்பட்ட நட்பைக் கொண்டுள்ள செல்வப்பெருந்தகை, ஒருவேளை காங்கிரஸ் மேலிடம் தவெக கூட்டணியிலிருந்து விலக நேரிட்டால் அல்லது தனக்குக் கட்சியில் போதிய முக்கியத்துவம் கிடைக்காதபட்சத்தில் திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாகப் பேசப்படுகிறது. மேலும், டெல்லி காங்கிரஸ் தலைமையின் மறைமுக சிக்னலாலேயே அவர் இவ்வாறு பேசுகிறாரா என்ற சந்தேகமும் நிலவுகிறது.

   

இருப்பினும், இந்த விவகாரம் குறித்து சத்தியமூர்த்தி பவன் வட்டாரங்கள் வேறுபட்ட கருத்துகளைத் தெரிவிக்கின்றன. செல்வப்பெருந்தகை தற்போது கட்சியின் மாநிலத் தலைவராக இல்லாததால், அவரது கருத்துகள் தனிப்பட்ட விருப்பமே தவிர கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என்று அவர்கள் தெளிவுபடுத்துகின்றனர். புதிய தலைவர் மாணிக்கம் தாகூரின் கருத்துகளே முதன்மையானவை என்றும், பக்கா காங்கிரஸ்காரரான செல்வப்பெருந்தகை திமுகவில் இணையும் முடிவை எடுக்க மாட்டார் என நம்புவதாகவும் காங்கிரஸ் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.