வரவிருக்கும் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு பாஜக தனது முழு ஆதரவை அளிக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அதிமுக விரைவில் தனது அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டார். இத்தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக இணைந்து களம் காண்பது கூட்டணி வட்டாரத்தில் முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார். “முந்தைய தேர்தலில் நமது கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சிலர், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து போட்டியிடுகிறார்கள். இந்த இடைத்தேர்தல் எதற்காக திணிக்கப்பட்டுள்ளது என்பதை மக்கள் தெளிவாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும், சுயநல அரசியல் மற்றும் குதிரை பேரமே இந்தத் தேர்தல் உருவாவதற்குக் காரணம் எனச் சாடிய அவர், மக்கள் இத்தகைய அரசியல் நகர்வுகளுக்குத் தேர்தலில் உரிய பதிலடி கொடுப்பார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்
