விழுப்புரம் மாவட்டம் கோட்டகுப்பம் அடுத்த பொம்மையார்பாளையத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பவரின் மகன் அஜித் (25). புதுச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தங்கும் விடுதி நடத்தி வந்த இவர், தனது பிறந்தநாளை முன்னிட்டு விடுதி அருகிலுள்ள வாலிபால் மைதானத்தில் நண்பர்களுடன் கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார்.
அப்போது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மதுபோதையில் தங்களுக்குள் அடித்துக்கொண்டு சண்டையிட்டதைக் கண்ட அஜித், அவர்களைத் தடுத்து நிறுத்தி கண்டித்து அனுப்பி வைத்துள்ளார். பின்னர் அவர் விடுதிக்குச் சென்று பணிகளை கவனித்துக் கொண்டிருந்தபோது, ஆத்திரமடைந்த 5 பேர் கொண்ட போதைக் கும்பல் ஆயுதங்களுடன் விடுதிக்குள் புகுந்து அஜித்தை சரமாரியாக வெட்டியுள்ளது.
வெட்டுக் காயங்களுடன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஈசிஆர் சாலை வரை ஓடிவந்து மயங்கி விழுந்த அஜித்தை, மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அதிகாலை 4.30 மணியளவில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கோட்டகுப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து ஹரிராஜ், பூபதி, பிரதீஷ், லோகேஷ் மற்றும் சஞ்சய் ஆகிய 5 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
