ஹாங்காங்கின் குவாய் சங் பகுதியில் இயங்கி வரும் ‘வா ஜெர்’ என்ற உணவகத்தில் வாங்கப்பட்ட நூடுல்ஸ் பார்சலுக்குள் புதிதாகப் பிறந்த எலிக்குட்டி ஒன்று உயிருடன் உயிருக்குப் போராடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கள்கிழமை மதியம் பெண் வாடிக்கையாளர் ஒருவர் இந்த உணவகத்தில் ‘சாடே பீப் நூடுல்ஸ்’ உள்ளிட்ட உணவுகளை பார்சலாக வாங்கிச் சென்றுள்ளார். வீட்டிற்குச் சென்று உணவருந்துவதற்காக டப்பாவைத் திறந்தபோது, அடர்ந்த சாஸுக்கு நடுவே ரோமங்கள் கூட முளைக்காத சிறிய எலிக்குட்டி ஒன்று உயிருடன் கை, கால்களை அசைத்துக் கொண்டு இருந்ததைக் கண்டு அவர் உறைந்துபோனார்.
இந்த அதிர்ச்சி கரமான காட்சியை அப்பெண் உடனடியாகத் தனது கைபேசியில் படம்பிடித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ இணையத்தில் தீயாகப் பரவி வைரலானதைத் தொடர்ந்து, பொதுமக்கள் மத்தியிலும் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் உணவகங்களின் சுகாதாரம் குறித்து பெரும் கொந்தளிப்பும் அச்சமும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், ஹாங்காங்கின் உணவு மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உணவிலிருந்த எலிக்குட்டியைக் கைப்பற்றி ஆய்விற்காக எடுத்துச் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ‘வா ஜெர்’ உணவகத்தில் அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அங்கு அடிப்படை சுகாதார பராமரிப்பு கூட இல்லாததும், உணவு தயாரிப்பு முறையில் உ அலட்சியம் நிலவியதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து, உணவுப் பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் அந்த உணவகத்தின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு சட்டப்பூர்வ நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. உணவகங்களில் முறையான சுகாதாரத்தைப் பராமரிப்பதை அரசுத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
