“உடனே இதை பேசுங்க”…. சௌமியா அன்புமணிக்கு நள்ளிரவில் பறந்த ராமதாஸின் ஃபோன் கால்… பேரவையில் முதலமைச்சரையே திரும்பி பார்க்க வைத்த ‘ஒற்றைப் பேச்சு’….!

By Nanthini on புரட்டாதி 9, 2026

Spread the love

தமிழ்நாடு சட்டமன்ற மானியக் கோரிக்கை விவாதத்தில் உரையாற்றிய பாமக சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, மக்கள் நலன் மற்றும் நலிவடைந்தோர் உரிமைகள் தொடர்பான பல்வேறு முக்கியமான கோரிக்கைகளை முன்வைத்து கவனத்தை ஈர்த்துள்ளார். சட்டமன்ற நடவடிக்கைகள் நேரலையில் ஒளிபரப்பப்படுவதற்கு மகிழ்ச்சி தெரிவித்த அவர், இந்த மானியக் கோரிக்கை விவாதத்தை இன்னும் சில நாட்கள் கூடுதலாக நடத்தியிருக்கலாம் எனக் குறிப்பிட்டார். மேலும், அரசுத் துறைகளில் ஊழலை ஒழிக்கக் கூடுதல் லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர்களை நியமிக்க வேண்டும் என்றும், சேவை பெறும் உரிமைச் சட்டத்தை விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மின்சாரம் மற்றும் பள்ளிக்கல்வி போன்ற அடிப்படைத் துறைகளில் நிலவும் ஊழல்கள் முற்றிலும் ஒழிக்கப்பட்டால் மட்டுமே, அதன் உண்மையான பலன்களான மின் கட்டணக் குறைப்பு மற்றும் கல்விக் கட்டணக் குறைப்பு போன்றவை நேரடியாக சாமானிய மக்களைச் சென்று சேரும் என்று அவர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ₹5 கோடியாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்தார். தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் குடிநீரில் ஃபுளோரைடு கலப்பு அதிகமாக இருப்பதால், மக்கள் குடிநீரின்றி அவதிப்படுகின்றனர்; எனவே சட்டமன்ற உறுப்பினர் நிதியைப் பயன்படுத்தி RO சுத்திகரிப்பு அமைப்புகளை நிறுவ விதிவிலக்கு அளித்து அனுமதி வழங்க வேண்டும் என்றும் அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.

   

இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள 105 அகதிகள் முகாம்களில் வசிக்கும் சுமார் 57,000 ஈழத் தமிழர்களின் வாழ்வாதாரம் குறித்துப் பேசிய அவர், அவர்களுக்கு அரசு அறிவித்துள்ள வீடு கட்டும் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தி, நல்வாழ்வை உறுதி செய்ய வேண்டும் என்றார். பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஈழத் தமிழர்களின் பிரச்சனைகள் குறித்துச் சட்டமன்றத்தில் பேசுமாறு அறிவுறுத்தியதாகக் குறிப்பிட்ட சௌமியா அன்புமணி, அகதிகளாக வாழும் தமிழர்களுக்குப் நிரந்தரப் பாதுகாப்பும் வசதியும் செய்து தரப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார்.

   

இறுதியாக, மகளிருக்கான இலவச அரசுப் பேருந்து பயணத் திட்டத்தைக் கிராமப்புறங்களில் இயக்கப்படும் தனியார் பேருந்துகளுக்கும் நீட்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். பெரும்பாலான கிராமப்புற மக்களுக்குத் தனியார் பேருந்துகளே முதன்மைப் போக்குவரத்துச் சாதனமாக இருப்பதால், இந்த விரிவாக்கம் ஏழைப் பெண்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும் எனச் சுட்டிக்காட்டினார். அதே வேளையில், பொதுப் போக்குவரத்துத் துறை முழுமையாக அரசின் கட்டுப்பாட்டிலேயே இயங்க வேண்டும் என்பதையும் தனது உரையின் நிறைவாக அவர் பதிவு செய்தார்.