தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு களமிறங்கப்போகும் வேட்பாளர்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஏற்கனவே திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து ஜெயக்குமார் (பெருந்துறை), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்யபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) மற்றும் சி.விஜயபாஸ்கர் (விராலிமலை) ஆகிய 6 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததால் மொத்தம் 7 தொகுதிகள் காலியாயின.
தற்போது முதற்கட்டமாக மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இதில் தவெக சார்பில் மதுராந்தகம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ சத்யபாமாவும் மீண்டும் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் பதவியை ராஜினாமா செய்தபோதே மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என தவெக தலைமை உறுதியளித்திருந்ததாகத் தெரிகிறது. அதேவேளையில், இழந்த தொகுதிகளைக் கைப்பற்ற அதிமுகவும், தன் பலத்தை நிருபிக்க திமுகவும் இந்த இரு தொகுதிகளிலும் பலப்பரீட்சை செய்ய வலுவான வேட்பாளர்களைக் களமிறக்கத் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன.
