தமிழ் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்து நான்கு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. புதிய ஆட்சி அமைந்தபோதிலும் நிர்வாகக் குளறுபடிகள் தொடர்வதாக விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வெங்கட்ராமன் தவெக அரசின் செயல்பாடுகள் குறித்தும் திமுகவின் விமர்சனங்கள் குறித்தும் விளக்கமளித்துள்ளார். “திமுக ஆட்சியின் ஊழல் கோப்புகள் முதலமைச்சர் விஜய் அவர்களின் மேஜையில் தயார் நிலையில் உள்ளன” எனக் குறிப்பிட்ட அவர், சில பைல்களைத் தான் நாங்கள் இன்னும் பார்க்கவே தொடங்கியுள்ளோம், அதற்குள்ளாகவே திமுகவினர் ஏன் இவ்வளவு பதறுகிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் வெங்கட்ராமன், நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்துப் பேசினார். “இந்திய அளவில் ‘ரெட் அழுகல்’ நோய் பாதிப்பால் கரும்பு உற்பத்தி பாதிக்கப்பட்டு, சர்க்கரை விலை உயர்ந்துள்ளது. தேவைப்பட்டால் வெளிநாடுகளிலிருந்து சர்க்கரையை இறக்குமதி செய்து நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவருவோம். மேலும் அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட பொருட்களின் வரத்தைத் தொடர்ந்து கண்காணித்து, பொதுமக்களுக்குப் பாதிப்பில்லாத வகையில் உரிய நடவடிக்கை எடுப்போம்” என்று உறுதியளித்தார்.
தொடர்ந்து, 2029 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் விஜய்க்கு பிரதமராவதற்கான தகுதி குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் வெங்கட்ராமன் காட்டமாக பதிலளித்தார். “2029 தேர்தலுக்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. தற்போது சட்டமன்ற பட்ஜெட் மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. எங்களின் ஒரே குறிக்கோள் மக்களுக்கான நன்மைகளைச் செய்வது மற்றும் பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்களை முழுமையாகச் செயல்படுத்துவதுதான். பத்திரிகையாளர்களோ அல்லது எதிர்க்கட்சியினரோ சொல்கிறார்கள் என்பதற்காக எங்களின் கவனத்தைச் சிதறடிக்க முடியாது. தகுதி என்பது செயலில் மட்டுமே தெரியும்” எனக் கூறினார்.
கடந்த திமுக அரசின் நிதியமைப்பைச் கடுமையாக விமர்சித்த அமைச்சர், “தவெக அரசு மக்களுக்குத் தேவையான நலத்திட்டங்களுக்காக ரூ.45,000 கோடி கடன் வாங்கியுள்ளது. முந்தைய திமுக ஆட்சியைப் போல நாங்கள் கடன்களில் 30 சதவீதம் ‘பார்ட்டி ஃபண்ட்’ பெறவில்லை. திமுக ஆட்சியில் வாங்கிய கடன்களில் பெரும் பகுதி கமிஷனுக்கே சென்றது, ஆனால் நாங்கள் மக்கள் வரிப்பணத்தை முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் திட்டங்களுக்குப் பயன்படுத்துகிறோம். துறை ரீதியான சோதனைகளுக்கும் அரசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. முதலமைச்சரின் டேபிளில் உள்ள மீதி பைல்களைப் புரட்டும்போது உண்மைகள் ஒவ்வொன்றாக வெளியே வரும்” என்று கூறி முடித்தார்.
