உலகின் முன்னணி தொழில் நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக கடந்த செப்டம்பர் 1-ம் தேதி ஜான் டர்னஸ் பொறுப்பேற்றார். டிம் கூக்கிற்குப் பிறகுப் பொறுப்பேற்றுள்ள இவரது லிங்க்டுஇன் சமூக வலைத்தளப் பக்கம் தற்போது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
பொதுவாகப் பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் தங்கள் சுயவிவரப் பக்கத்தில் பல சாதனைகள் மற்றும் விவரங்களைப் பதிவிடுவது வழக்கம். ஆனால், ஜான் டர்னஸின் லிங்க்டுஇன் பக்கத்தில் அவர் ஆப்பிள் சி.இ.ஓ என்ற விவரம்கூட இன்னும் புதுப்பிக்கப்படாமல், பழைய வன்பொருள் பொறியியல் தலைவர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஐபேட், ஏர்பாட்ஸ், ஐபோன் போன்ற சாதனங்களை உருவாக்குவதில் அவர் ஆற்றிய 25 ஆண்டுக்காலப் பங்களிப்புகள் எதுவுமே அந்தப் பக்கத்தில் குறிப்பிடப்படவில்லை.
இதைக் கண்ட நெட்டிசன்கள், “உண்மையான திறமை மற்றும் உழைப்பு இருக்கும் இடத்திற்குத் தனிப்பட்ட விளம்பரங்கள் தேவையில்லை என்பதற்கு இவரே சான்று” எனப் பாராட்டி வருகின்றனர். சுயவிவரத்தில் வீண் விளம்பரம் செய்யாமல் தனது உழைப்பால் உயர்ந்த ஆப்பிள் புதிய சி.இ.ஓ-வின் இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
