பொதுவாக வீடுகளுக்கு 14.20 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது புதிதாக 10 கிலோ எடை கொண்ட இண்டேன் கேஸ் சிலிண்டர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த 10 கிலோ இண்டேன் கேஸ் சிலிண்டரை பதிவு செய்த வெறும் 4 மணி நேரத்திற்குள்ளாகவே நுகர்வோரின் வீடுகளுக்கே சென்று விநியோகம் செய்யும் புதிய அதிவேக சேவை திட்டம் தற்போது அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தச் சிறப்புச் சேவை முதற்கட்டமாகச் சென்னை, கோவை, செங்கல்பட்டு, மதுரை, திருச்சி, திருப்பூர் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடைமுறைக்கு வந்துள்ளது. கேஸ் சிலிண்டருக்காக நீண்ட நேரம் காத்திருக்கத் தேவையில்லாமல், பதிவு செய்த சில மணி நேரத்திலேயே கிடைக்கும் இந்த வசதி பொதுமக்கள் மற்றும் நுகர்வோரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
