மகாராஷ்டிராவின் ஷாபூர் பகுதியில் உள்ள பழங்குடியினர் நலத்துறை உறைவிடப் பள்ளியில் சமையல் உதவியாளர் மீது 22 மாணவிகள் பாலியல் வன்கொடுமைப் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு நடத்தும் இத்தகைய உண்டு உறைவிடப் பள்ளிகளில் மாணவியரின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ள இச்சம்பவம், மாநிலம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
குற்றவாளியாகக் கருதப்படும் நபர் மீது ஏற்கனவே போக்சோ சட்டம் பாய்ந்திருந்த போதிலும், அவர் எவ்வாறு மீண்டும் அதே பள்ளியில் பணியமர்த்தப்பட்டார் என்ற அதிர்ச்சித் தகவலும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முந்தைய வழக்கின் விசாரணை மற்றும் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கு குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
பள்ளியின் நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அலட்சியமே மாணவிகளுக்கு எதிரான இந்த அத்துமீறலுக்கு முக்கியக் காரணம் என்று கூறி பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அரசு உடனடியாகக் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
