“10,000 கேட்டவங்க இப்ப 20,000 கேக்குறாங்க”… டிரம்புக்கு பதிலா விஜய்யும் அமெரிக்க அதிபராகலாம்…. சட்டமன்றத்தைக் கலாய்த்த எடப்பாடி பழனிசாமி…!

By Nanthini on புரட்டாதி 1, 2026

Spread the love

தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் சூழலில், தற்போதைய ஆட்சி நிர்வாகத்தையும் சட்டமன்ற செயல்பாடுகளையும் கடுமையாக விமர்சித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். சட்டமன்றத்தில் அமைச்சர்கள் துறை சார்ந்த கேள்விகளுக்கு முறையான பதில்களை அளிப்பதில்லை என்றும், நிஜமான சட்டமன்றமாக இல்லாமல் சினிமாவில் வருவது போன்ற நாடகத் தன்மையுடனேயே அவையின் செயல்பாடுகள் அமைந்துள்ளன என்றும் அவர் சாடியுள்ளார்.

சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தற்போதைய அரசு மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல், சமூக வலைத்தளங்களில் ‘ரீல்ஸ்’ பதிவிட்டே ஆட்சியை நடத்திக் கொண்டிருப்பதாகக் குற்றம்சாட்டினார். மேலும், “டிரம்புக்குப் பதிலாக நடிகர் விஜய் கூட அமெரிக்க அதிபராக ஆசைப்படலாம், அது அவரவர் விருப்பம்” என்று குறிப்பிட்ட அவர், பேரவைத் தலைவரின் செயல்பாடுகள் மற்றும் அவை நடத்தப்படும் நேரத்தைக் கேலி செய்யும் விதமாகவும் கருத்துத் தெரிவித்தார்.

   

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துள்ளதாகவும், நிர்வாகச் சீர்கேட்டின் காரணமாகவே குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி சுட்டிக்காட்டினார். ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே ஊழல் பெருமளவில் அதிகரித்துள்ளதாக மக்கள் பேசுவதாகவும், லஞ்சம் கேட்கும் தொகை இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் பகிரங்கக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

   

காவல்துறையைத் தன்வசம் வைத்துள்ள முதலமைச்சரின் பெயரைச் சொன்னால் கூட லஞ்ச வேட்கை குறையவில்லை எனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய ஆட்சியால் நாட்டின் கடன் சுமை பல லட்சம் கோடிகளாக உயரும் எனக் எச்சரித்தார். மேலும், தற்போதைய அரசு தனது ஐந்து ஆண்டு காலத்தை முழுமையாக நிறைவு செய்யாது என்றும், நிதி நிர்வாகத்தைச் சீரழித்து மாநிலத்தைப் பெரும் கடன் வலையில் தள்ளிவிடும் என்றும் அவர் கடுமையாகச் சாடினார்.