மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் FQL EXCHANGE, V.G INVESTMENT போன்ற மொபைல் செயலிகள் மூலம் அமெரிக்க டாலர் மற்றும் பிட்காயின் முதலீட்டில் 50 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் ஒரே மாதத்தில் ஒரு லட்சம் ரூபாயாக இரட்டிப்பாகத் தரும் என ஆசை வார்த்தைகள் கூறி ஆயிரக்கணக்கான பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் செயலியில் பணம் இரட்டிப்பாகக் காட்டுவதைக் கண்டு பொதுமக்கள் மேலும் பலரைச் சேர்த்து முதலீடு செய்த நிலையில், திடீரென அந்தச் செயலி முடங்கியதுடன் ஏஜெண்டுகளும் முறையான பதிலளிக்காததால் ஆத்திரமடைந்த மக்கள் ஏஜெண்டுகளின் வீடுகளை முற்றுகையிட்டும், அலங்காநல்லூர் வலசை கிராமத்தில் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தேவநாதன் அறிவுறுத்தலின் பேரில் மேலூர் மற்றும் அலங்காநல்லூர் பகுதிகளில் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு ஏஜெண்டுகளைக் கைது செய்து வருவதோடு, மேலூர் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களிடமிருந்து புகர் மனுக்களையும் பெற்று வருகின்றனர். குறிப்பாக மேலூர், சிவகங்கை, நத்தம் உள்ளிட்ட பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் தங்களது இழந்த பணத்தை மீட்கக் கோரி மனு அளித்து வருகின்றனர்.
பொதுமக்களின் அறியாமையைப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் சுருட்டப்பட்டுள்ள இந்த மோசடி குறித்து சமூக ஆர்வலர்கள் சிபிசிஐடி அல்லது மத்திய அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ மூலம் உரிய விசாரணை நடத்தி பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும், காவல்துறையினர் பொதுமக்களிடமிருந்து பெறும் மனுக்களுக்கு முறையான ரசீது வழங்க வேண்டும் என்றும் தீவிர கோரிக்கை விடுத்துள்ளனர்.
