தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க இனிப்புகளான நெல்லை இருட்டுக்கடை அல்வா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா மற்றும் கோவில்பட்டி கடலை மிட்டாய் ஆகியவற்றின் விலைகள் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளன. மூலப்பொருட்களான சர்க்கரை, வெல்லம், ஏலக்காய் மற்றும் நிலக்கடலை ஆகியவற்றின் கடும் விலை உயர்வே இந்த மாற்றத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. திருநெல்வேலியில் இருட்டுக்கடை அல்வா மட்டுமன்றி பிற கடைகளிலும் அல்வா, பால் அல்வா மற்றும் பால்கோவா ஆகியவற்றின் விலை கிலோவுக்கு ரூ.20 வரை உயர்த்தப்பட்டுள்ளது. விலையேற்றம் அமலுக்கு வந்தபோதிலும், நெல்லையில் அல்வா விற்பனை வழக்கம்போல் விறுவிறுப்பாகவே நடைபெற்று வருகிறது.
புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவின் விலை கிலோவுக்கு ரூ.320-லிருந்து ரூ.400 ஆக உயர்த்தப்பட்டுள்ளது வாடிக்கையாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால், தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பால்கோவா வாங்கிச் செல்வது வழக்கம். தற்போது நிலவும் கடும் சர்க்கரை விலை உயர்வால் பால்கோவா உற்பத்தியாளர்கள் கடுமையான நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர். எனவே, நலிவடைந்து வரும் இத்தொழிலைப் பாதுகாக்கவும் சர்க்கரை விலையைக் கட்டுப்படுத்தவும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உற்பத்தியாளர் திருப்பதிராஜ் உள்ளிட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேபோல், புவிசார் குறியீடு பெற்ற கோவில்பட்டி கடலை மிட்டாயின் விலையும் 25% வரை உயர்ந்துள்ளது. முன்னர் ரூ.220-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ கடலை மிட்டாய் தற்போது ரூ.270-க்கு விற்கப்படுகிறது. இதுதவிர, பிற இனிப்பு வகைகளான ஜாங்கிரி கிலோவுக்கு ரூ.70 வரையிலும், அல்வா ரூ.150 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளன. ஒரு குளோப் ஜாமூன் விலை ரூ.18-லிருந்து ரூ.22 ஆக அதிகரித்துள்ளது. தொடர் விலையேற்றம் காரணமாக இனிப்புகளின் விற்பனை சரிவடைந்துள்ளதால், உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தி அளவைக் குறைத்து கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
