யார் அந்த மர்ம நபர்?… இளம்பெண்ணை தற்கொலைக்கு தள்ளிய ஆபாச வீடியோ மிரட்டல்… போலீசார் வலைவீச்சு…!!

By Gayathri on ஆவணி 26, 2026

Spread the love

சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன மேலாளர் ரவிச்சந்திரனின் மனைவி ரட்சிதா. சமீபத்தில் ரட்சிதாவை செல்போனில் தொடர்புகொண்ட மர்ம நபர் ஒருவர், தன்னிடம் அவரது ஆபாச வீடியோ இருப்பதாகவும், அதனை கணவருக்கு அனுப்பிவிடப் போவதாகவும் கூறி மிரட்டியுள்ளார். இதுகுறித்து கணவரிடம் தெரிவித்து அவர் ஆறுதல் கூறியபோதிலும், அந்த மிரட்டலால் ஏற்பட்ட கடும் மன உளைச்சல் காரணமாக ரட்சிதா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வேலைக்கு சென்ற கணவர் இரவு மனைவியைத் தொடர்பு கொண்டபோது அவர் அழைப்பை ஏற்காததால், வீட்டின் உரிமையாளர் உதவியுடன் கதவை உடைத்துப் பார்த்தபோதே இந்த விபரீத முடிவு தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த விருகம்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். குறிப்பாக, ரட்சிதாவை தொலைபேசியில் மிரட்டி அவரது தற்கொலைக்கு காரணமான அந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் யார் என்பதை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.