1999-ஆம் ஆண்டு அமெரிக்காவின் கொலராடோ மலைப் பகுதியில் ஜோய் வேரன் என்பவர் தனது கணவர், தந்தை மற்றும் 3 குழந்தைகளுடன் குடும்பச் சுற்றுலா சென்றிருந்தார். அப்போது அவரது 3 சிறிய குழந்தைகள் விளையாடுவதற்காக நிறுத்தப்பட்டிருந்த எஸ்.யு.வி காரில் ஏறியுள்ளனர். எதிர்பாராதவிதமாக காரின் கியர் நழுவி, வாகனம் கட்டுப்பாட்டை இழந்து செங்குத்தான பள்ளத்தாக்கை நோக்கி உருண்டு செல்லத் தொடங்கியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் ஜோய் வேரன், யோசிக்கக்கூட நேரமில்லாமல் உருண்டு வந்த காரின் சக்கரங்களுக்கு இடையே தன் உடலைச் செலுத்தித் தடுத்து நிறுத்த முயன்றார்.
அவரது இந்தத் தியாகத்தால் காரின் வேகம் சற்று குறைந்ததை அடுத்து, உடனடியாக அவரது தந்தை காரின் அவசர பிரேக்கை இழுத்து காரை நிறுத்தினார். இதில் 3 குழந்தைகளும் எவ்வித காயமுமின்றித் தப்பினர். ஆனால், ஜோய் வேரனின் உடல் நசுங்கி, அவரது நடக்கும் திறன் நிரந்தரமாகப் பறிபோனது. ஆயினும், “என் பிள்ளைகளின் உயிரைக் காப்பாற்றியதற்காக நான் என்றும் வருத்தப்பட்டதில்லை” என்று சக்கர நாற்காலியில் வாழும் அந்த தாய் நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.
