“திமுகவில் தடாலடி மாற்றம்… எ.வ.வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் உள்ளிட்ட 13 வி.ஐ.பி-களுக்கு செக் வைத்த தலைமை”…. கொந்தளிக்கும் அறிவாலயம்…!

By Nanthini on ஆவணி 24, 2026

Spread the love

2026 தமிழக சட்டசபை தேர்தல் தோல்விக்குப் பிறகு, திமுகவின் அமைப்பு ரீதியான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன. தலைமைக்குச் சென்ற பல்வேறு புகார்களின் அடிப்படையில், கட்சியின் அடிமட்டம் முதல் மாவட்ட நிர்வாகம் வரை மாற்றங்களைக் கொண்டுவர திமுக செயற்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி, 77 ஆக இருந்த மாவட்டங்களின் எண்ணிக்கை 110 ஆக உயர்த்தப்படுவதோடு, கிளை செயலாளர்களுக்கு 45, வட்ட செயலாளர்களுக்கு 50, ஒன்றிய செயலாளர்களுக்கு 60, மாவட்ட செயலாளர்களுக்கு 70 என வயது வரம்பும், அதிகபட்சமாக இரு முறை மட்டுமே பதவி வகிக்கும் கட்டுப்பாடும் கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த வயது வரம்பு விதியால் எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான், ஆர்.காந்தி, சுந்தர், எஸ்.ஆர்.சிவலிங்கம், முத்துசாமி, சாக்கோட்டை அன்பழகன், ரகுபதி, ராமகிருஷ்ணன், ஆவுடையப்பன், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 13 மூத்த மாவட்ட செயலாளர்கள் தங்களது பொறுப்புகளை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது. பதவி இழக்கும் வாய்ப்புள்ள மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், அவர்களுக்கு தலைமை சார்பில் மாநில அல்லது அமைப்புக் குழு அளவிலான மாற்றுப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

   

அதேவேளையில், நிர்வாகப் பதவிகளுக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்ட போதிலும், கட்சியின் அதிகாரம் மிகுந்த தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் இளைஞர் அணி தலைவர் ஆகிய முக்கியப் பொறுப்புகளுக்கு எவ்வித வயது வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை. இந்த இரட்டை நிலைப்பாடு கட்சியினரிடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. பதவி இழக்கும் சில மூத்த நிர்வாகிகளின் ஆதரவாளர்கள், ‘தலைமைப் பதவிகளுக்கு மட்டும் ஏன் இந்த விலக்கு?’ என்ற கேள்வியை எழுப்பி, சமூக வலைதளங்களில் தங்கள் எதிர்ப்பையும் கொந்தளிப்பையும் மறைமுகமாகப் பதிவிட்டு வருகின்றனர்.

   

புதிதாகப் பிரிக்கப்படும் மாவட்டச் செயலாளர் பதவிகளுக்கு இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்யப்பட்டிருந்தாலும், அதற்குத் தேர்தல் நடத்துவதா அல்லது நியமனம் செய்வதா என்பதில் இழுபறி நீடிக்கிறது. உட்கட்சித் தேர்தல் நடத்தினால் பிரிவினைகள் அதிகமாகும் என்பதால், தங்கள் ஆதரவாளர்களை நேரடியாக நியமிக்க வேண்டும் என்று இளைஞரணி தரப்பில் வலியுறுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது. இதனால் அண்ணா அறிவாலயத்தில் தேர்தல் நடத்துவது குறித்து தனியாக ஆலோசனைகள் நடைபெற்று வரும் நிலையில், உட்கட்சிப் பூசல் மேலும் தீவிரமடைந்து வருகிறது.