விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த நண்பர்களான பாண்டித்துரை மற்றும் முனீஸ்வரன் ஆகியோர் மதுரையில் கட்டிடத் தொழிலாளர்களாகப் பணிபுரிந்து வந்தனர். சொந்த ஊரில் நடைபெறும் கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக, இருவரும் மதுரையிலிருந்து இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். மதுரை விமான நிலையம் அருகேயுள்ள சின்ன உடைப்பு தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, ஓடுபாதையில் இருந்து விமானம் புறப்படுவதை ஆர்வத்துடன் வேடிக்கை பார்க்க முயன்றுள்ளனர்.
விமானத்தை எட்டிப் பார்த்தவாறு கவனச்சிதறலுடன் வாகனத்தை ஓட்டியதால், திடீரென கட்டுப்பாட்டை இழந்த அவர்களது மோட்டார் சைக்கிள் சாலையோரத் தடுப்பின் மீது பலமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட இரு இளைஞர்களும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்த பெருங்குடி மற்றும் போக்குவரத்து காவல் துறையினர், சடலங்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
