எழுத்தாளரும் கல்வியாளருமான தீபக் ராமோலா, தனது சிறுவயது முதல் குரலின் காரணமாகச் சந்தித்த உருவக் கேலி மற்றும் மனவேதனைகள் குறித்து இன்ஸ்டாகிராம் வீடியோ ஒன்றில் உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். “உனது குரல் ஒரு சிறுவன் அல்லது பெண் பேசுவது போல் இருக்கிறது; ஆளுமைமிக்க கம்பீரக் குரலாக இல்லை” என்று பலரும் அவரைக் கேலி செய்து வந்ததால், அவர் தனது குரலைக் குறித்து மிகுந்த தயக்கமும் தாழ்வு மனப்பான்மையும் கொண்டிருந்தார்.
அவர் 11-ஆம் வகுப்பு படிக்கும் போது, அவரது ஆங்கில ஆசிரியர் பிரகதி கபூர் என்பவருடன் பேசிய ஒரு உரையாடல் அவரது பார்வையை முற்றிலும் மாற்றியது. அவர் தீபக்கிடம், “உனக்கு உன்னுடைய குரல் பிடிக்குமா?” என்றும், “நாளை காலை உன்னால் பேச முடியாமல் போனால் எப்படி இருக்கும்?” என்றும் கேட்டார். அந்த உரையாடலின் முடிவில் ஆசிரியர், “உனக்கு உன் குரல் பிடிக்கும் என்றால், அதை நீ பெருமையோடு ஏற்றுக்கொள்ள வேண்டும்; உனது அடையாளத்தை நீயே சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்” என்று அறிவுறுத்தினார். அந்த அறிவுரை தீபக்கின் மனதிலிருந்த தயக்கத்தைப் போக்கித் தன்னம்பிக்கையைத் தந்தது.
https://www.instagram.com/reel/Db99FH7htjO/?utm_source=ig_web_button_share_sheet
எந்தக் குரலுக்காக அவர் கேலி செய்யப்பட்டாரோ, அதே குரலைக் கொண்டு அவர் உலகின் பல நாடுகளுக்கும், பல்கலைக்கழகங்களுக்கும் சென்று உரையாற்றும் அளவுக்கு உயர்ந்தார். தன்னைப் பற்றிய மற்றவர்களின் விமர்சனங்களை விட சுய ஏற்றுக்கொள்ளலே முக்கியம் என்பதை உணர்ந்ததாக தீபக் கூறுகிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, தங்களின் சுய அடையாளத்திற்காகப் போராடும் பலருக்கும் பெரிய அளவிலான விழிப்புணர்வையும் தன்னம்பிக்கையையும் வழங்கி வருகிறது.
